டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சத்யேந்திர ஜெயின். இவர் அமைச்சராக இருந்த கடந்த 2015 - 2016 காலகட்டங்களில், சத்யேந்திர ஜெயின் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு, போலி நிறுவனங்கள் மூலம் சட்ட விரோதமாக கோடிக்கணக்கில் பணப்பரிமாற்றம் நடந்ததாகக் கூறப்பட்டது.
இதையடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு சி.பி.ஐ., ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சத்யேந்திர ஜெயின் மீது வழக்குப் பதிவு செய்தது. இதனை அடிப்படையாக வைத்து சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கையும் பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த மே மாதம் அமைச்சர் சத்யேந்திர ஜெயினை கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைத்தனர். இவருடன் சேர்த்து வைபவ் ஜெயின், அங்குஷ் ஜெயின் ஆகிய இருவரையும் அமலாக்கத்துறை கைது செய்தது.
இதனையடுத்து, இந்த வழக்கில் இடைக்கால ஜாமீன் வழங்க கோரி அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தரப்பிலிருந்து டெல்லி உச்சநீதிமன்றத்தில் கடந்த 26 ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சத்யேந்திர ஜெயினின் சில மருத்துவ காரணங்களுக்காக ஆறு வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது. அதன் பின் ஜுலை 24 அன்று இடைக்கால ஜாமீனை ஐந்து வாரங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், நீதிபதி ஏ.எஸ். போபண்ணா மற்றும் எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தரப்பிலிருந்து ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, சத்யேந்திர ஜெயினின் உடல்நிலையை குறிப்பிட்டு மருத்துவர்கள் நீர்நிலை பிசியோதெரப்பியை பரிந்துரைத்துள்ளனர். குழியலறையில் அவரால் நிற்கும் நிலையில் மட்டுமே இருக்கிறார். மேலும் மற்றவர்கள் உதவியோடு தான் அவரால் நடக்க முடியும். அதனால், சிறையில் அவருக்கு நீச்சல் குளம் வழங்கி, கூடுதல் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதத்தை முன்வைத்தார்.
இதையடுத்து, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு ஜாமீன் நீட்டிப்பை கடுமையாக எதிர்த்தார். இருதரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதிகள், பிசியோதெரபிக்காக அவரை நீச்சல் குளத்திற்கு அழைத்து செல்லலாம். எல்லா நோயாளிகளுக்கும் நீச்சல் குளம் வழங்க முடியாது என்று தெரிவித்தார்கள். மேலும், சத்யேந்திர ஜெயினின் மருத்துவ காரணங்களை கருத்தில் கொண்டு அவருக்கு செப்டம்பர் 1 ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீனை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.