ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கங்கன் சிங் என்பவர் தெலுங்கானா மாநிலத்திற்கு குடிபெயர்ந்து 20 ஆண்டுகள் ஆகிறது. கங்கன் சிங், தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் தெலுங்கானா மாநிலம் வாராங்கலில் வசித்து வந்தார்.
சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்று திரும்பிய கங்கன் சிங் தனது மகன்களுக்கு ஆசையாக சாக்லேட்டுகளை வாங்கி வந்துள்ளார். கங்கன் சிங்கின் இரண்டாவது மகன் சந்தீப் சிங் வாராங்கலில் உள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
சனிக்கிழமை காலை பள்ளிக்கு செல்லும் போது தந்தை வாங்கி வந்த சாக்லேட்டுகளை பள்ளிக்கு கொண்டு சென்ற சந்தீப் சிங் காலை 10 மணியளவில் அதைச் சாப்பிட்டுள்ளார். சாக்லேட் தொண்டையில் சிக்கியதால் மூச்சு விட முடியாமல் தவித்த அவரை, பள்ளி நிர்வாகம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது. அதே சமயத்தில் சந்தீப் சிங்கின் பெற்றோரை தொடர்பு கொண்டு விஷயத்தை கூறியுள்ளது.
மருத்துவமனையில் சந்தீப் சிங்கினை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். எனினும் சந்தீப் சிங்கின் குடும்பத்தினர் எவ்வித புகாரும் கொடுக்காததால் வழக்கு எதுவும் பதியப்படவில்லை.