பிரதமர் நரேந்திர மோடி இன்று (19ம் தேதி) முதல் 24ம் தேதி வரை ஆறு நாட்களில் ஜப்பான், பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
ஜப்பான் நாட்டில் ஜி-7 மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் உறுப்பினராக இல்லாத சில நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜி-7 மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி இன்று ஜப்பான் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். ஜப்பானில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, அங்கு உலக அமைதி, நிலைத்தன்மை, நிலையான கிரகத்தின் செழிப்பு, உணவு, உரம் மற்றும் ஆற்றல் உள்ளிட்டவற்றைக் குறித்து உரையாற்ற இருக்கிறார்.
ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு கிளம்பும் பிரதமர் மோடி, 22ம் தேதி பப்புவா நியூ கினியா நாட்டிற்கு செல்கிறார். அங்கு அந்நாட்டின் தலைநகர் போர்ட் மோர்ஸ்பியில் அந்த நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மராப்பேவுடன் இணைந்து இந்தியா - பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான மன்றத்தின் 3வது உச்சி மாநாட்டை நடத்துகிறார். அதனைத் தொடர்ந்து அன்றே (22ம் தேதி) ஆஸ்திரேலியாவுக்கு பிரதமர் மோடி செல்கிறார். அங்கு சிட்னி நகரில் நடைபெறும் குவாட் நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். பிறகு 23ம் தேதி சிட்னி நகரில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி உரை நிகழ்த்த இருக்கிறார்.