பள்ளிக் கட்டணம் செலுத்தத் தவறிய 4 வயது குழந்தையைத் தாக்கிய பள்ளி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கல்வி வியாபார மயமாகி விட்டது. தனியார் நிறுவனங்கள், அரசியல்வாதிகள் என பலராலும் தொடங்கப்படும் இந்தப் பள்ளிகள், முழுக்க முழுக்க லாபநோக்கத்திற்காக மட்டுமே இயங்குகின்றன. இதனால், பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு குறைந்துள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் மிர்பேட் பகுதியில் செயல்பட்டு வரும் கிருஷ்ணவேணி நர்சரி பள்ளியில் பயின்றுவந்த நான்கு வயது குழந்தை, பள்ளிக் கட்டணம் கட்டத் தவறியதற்காக குச்சிகளால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளது. அடித்து, உதைத்தும் உள்ளனர். இதை பெற்றோரிடம் குழந்தை தெரிவித்த நிலையில், அந்தப் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.
மிர்பேட் காவல்நிலையத்தில் இதுதொடர்பாக புகாரளித்திருந்த நிலையில், பள்ளியின் இயக்குனர், முதல்வர் மற்றும் குழந்தையைத் தாக்கிய ஆசிரியை ஸ்வரூபா உள்ளிட்ட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.