ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்துள்ள தலிபான்கள், தங்களது இடைக்கால ஆட்சியை நடத்திவருகின்றனர். இந்தநிலையில், ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடுமையான உணவு பஞ்சமும் ஏற்பட்டுள்ளது. தலிபான்களுக்கு முன்னதாகவே அங்கு 80 சதவீத மக்கள் போதுமான உணவு கிடைக்காமல் தவித்த நிலையில், தலிபான்கள் நாட்டைக் கைப்பற்றிய பிறகு போதுமான உணவு கிடைக்காமல் தவிக்கும் மக்களின் நிலை 93 சதவீதமாக உயர்ந்துள்ளதாக உலக உணவு திட்டம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், ஆப்கனில் நிலவும் உணவு பஞ்சத்தைத் தீர்க்க உதவும் வகையில், அந்த நாட்டிற்கு 50 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமையை அனுப்ப இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஆண்டு இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு 75,000 மெட்ரிக் டன் கோதுமையை அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானுக்கு கோதுமை மட்டுமின்றி, மருத்துவ உதவிகளையும் அனுப்ப இந்தியா திட்டமிட்டுவருவதாக அந்த அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.