முந்தைய காங்கிரஸ்-தி.மு.க கூட்டணி அரசில் 2-ஜி அலைக்கற்றை ஊழல் நடந்ததாக மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ) தொடர்ந்த வழக்கில், தி.மு.க எம்.பி.க்கள் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த டெல்லியிலுள்ள சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம், ‘’குற்றச்சாட்டுகளுக்கு உரிய எந்த ஆதார ஆவணங்களையும் சி.பி.ஐ தாக்கல் செய்யவில்லை‘’ என்பதைச் சுட்டிக்காட்டி ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அத்தனை பேரையும் விடுதலை செய்து, கடந்த 2017-ல் தீர்ப்பளித்தது.
மேலும், இந்த வழக்கைத் தொடர்ந்த சி.பி.ஐ அதிகாரிகளைக் கண்டிக்கவும் செய்தது சி.பி.ஐ நீதிமன்றம். இந்த நிலையில், வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை.
இந்த வழக்கின் விசாரணையைக் கவனித்து வந்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி பிரிஜேஸ் சேத்தி, நவம்பர் மாதத்தோடு ஓய்வு பெற்ற சூழலில், இந்த வழக்கின் விசாரணை நீதிபதி கண்ணாவுக்கு மாற்றப்பட்டது. 2ஜி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களுக்கு எதிராக விசாரணையைத் தொடங்க வேண்டும் என்று மீண்டும் சி.பி.ஐ தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இதற்கு எதிராக 2ஜி வழக்கில் விடுவிக்கப்பட்டவர்கள் தனித்தனியாகத் தாக்கல் செய்த மனுக்களையும் நீதிமன்றம் நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து, 2ஜி வழக்கில் விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராகச் சிறப்பு அனுமதி மனுவை நீதிமன்றத்தில் சி.பி.ஐ தாக்கல் செய்திருந்தது.
இதன்மீது இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாமல் இருந்த சூழலில், சி.பி.ஐ தாக்கல் செய்த சிறப்பு அனுமதி மனுவை 2021 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதிவரை விசாரிப்பதாக நீதிபதி கண்ணா இன்று அறிவித்துள்ளார். இந்த மனு குறித்த விசாரணையின் போது, சி.பி.ஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சோனியா மாத்தூர், டிசம்பர் மாதத்திலேயே இந்த மனுவை விசாரிக்க வேண்டும் எனவும், தினம்தோறும் விசாரணை நடைபெற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். ஆனால், அதனை ஏற்றுக்கொள்ளாத நீதிபதி இதுதொடர்பாக ஜனவரி மாதம் விசாரணை நடைபெறும் என அறிவித்துள்ளார்.