ஒடிசா மாநிலம், நப்ரங்பூர் மாவட்டம் பிஜப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தனிராம். இவருக்குச் சொந்தமான பசு ஒன்று நவராத்திரி தினத்தில் கன்று ஈன்றுள்ளது. நவராத்திரி தினத்தில் தனித்துவமாகக் கன்று பிறந்ததால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். அந்த கன்று இரு தலைகள், மூன்று கண்களுடன் பிறந்ததால் தனிராமின் குடும்பத்தினர் ஆச்சரியம் அடைந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனிராம் பசுவை வாங்கினார். பசு, சமீபத்தில் கர்ப்பம் அடைந்தது. பசுவுக்குப் பிரசவ வலி ஏற்பட்டு பிரசவத்தில் சிக்கல் ஏற்பட்டது.
அவர் பசுவைப் பரிசோதித்த போது, கன்று இரண்டு தலைகள் மற்றும் மூன்று கண்களுடன் இருப்பதை உணர்ந்தார். பின்னர் கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் வித்தியாசமான அந்த கன்றைப் பசு ஈன்றது. புதியதாகப் பிறந்திருக்கும் இந்த அதிசய கன்றுக்குட்டி இரண்டு தலையோடு இருப்பதால் தாயிடம் பால் குடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நவராத்திரி விழாவில் தனித்துவமாகப் பிறந்திருப்பதால் அப்பகுதி மக்கள் கன்றை ஆச்சரியத்தோடு பார்த்துச் செல்கின்றனர்.
இது தொடர்பாக தனிராம் கூறுகையில், “இரு தலைகளுடன் பிறந்ததால் கன்றுக்குட்டி தன் தாயிடம் இருந்து பால் குடிப்பதில் சிக்கல் உள்ளது. எனவே, வெளியில் இருந்து பால் வாங்கி கன்றுக்குக் கொடுத்து வருகிறோம் என்றார். நவராத்திரி தினத்தில் இந்த கன்று அபூர்வமாகப் பிறந்ததால், அப்பகுதி மக்கள் இதனைக் கடவுள் துர்கா தேவியின் அவதாரமாக வழிபடத் துவங்கி உள்ளனர்” எனத் தெரிவித்தார்.