Skip to main content

எலான் மஸ்க்கால் நடுக்கும் ஊழியர்கள்; அசராத இந்தியர்

Published on 05/11/2022 | Edited on 05/11/2022

 

25-Year-Old Man's Post After Getting Fired From Twitter Wins Internet

 

உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் விண்வெளி ஆய்வு மைய நிறுவனருமான எலான் மஸ்க், உலகின் முன்னணி சமூக வலைதளமான ட்விட்டரை தன் வசப்படுத்திக் கொண்டார். முதலில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்த நிலையில், பிறகு அந்த முடிவில் இருந்து பின் வாங்கினார். அதன் பிறகு ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்திற்குச் சென்ற நிலையில், பலதரப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் எலான் மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு முழுமையாக ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார்.

 

இதனைத் தொடர்ந்து ட்விட்டரில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்த எலான் மஸ்க், தற்போது அந்த நிறுவனத்தின் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருவதோடு, ஆட்குறைப்புப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். அதன்படி ட்விட்டர் நிறுவனத்தை தன் வசப்படுத்திய அடுத்த நாளே தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த பராக் அகர்வாலைப் பொறுப்பில் இருந்து நீக்கினார். அத்துடன் அந்நிறுவனத்தின் சட்டத் துறை தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல், தலைமை நிதி அதிகாரி நெட் சேகல் ஆகியோரையும் பதவியிலிருந்து நீக்கினார்.

 

ட்விட்டரில் மொத்தம் இருந்த 7,500 ஊழியர்களைப் பாதியாகக் குறைக்க எலான் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.  அதன்படி ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றிய ஏராளமான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் நிறையப் பேர் தாங்கள் பணிநீக்கம் செய்யப்பட்டது குறித்து தங்களது ஆதங்கத்தை ட்விட்டரில் பகிர்ந்து வரும் நிலையில், அதற்கு நேர்மாறாக இந்தியாவைச் சேர்ந்த ட்விட்டர் ஊழியரான யஷ் அகர்வால், தான் நீக்கப்பட்டதை மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.  

 

25 வயதான யஷ் அகர்வால்,  ட்விட்டரில் பொதுக் கொள்கைக் குழுவில் பணியாற்றியுள்ளார். இந்நிலையில், பணியிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து யஷ் அகர்வால் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “இப்போதுதான் வேலை பறிபோனது. ட்விட்டரில் பணியாற்றியது மிகவும் பெருமைக்குரியது. இந்த கலாச்சாரமிக்க குழுவில் ஒரு பகுதியாக இருந்ததே பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்” எனச் சிரித்த முகத்துடன், கையில் ட்விட்டர் சின்னம் பொறிக்கப்பட்ட இரண்டு தலையணைகளுடன் மகிழ்ச்சியாக ஒரு புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.  யஷ் அகர்வால் தனக்கு வேலை போன விஷயத்தை நேர்மறையாக அணுகிய விதம் பலரிடமும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. 

 

எலான் மஸ்க் பெரும்பாலான இந்தியர்களை பணிநீக்கம் செய்வதாக கூறப்படுகிறது. ஆனால் ட்விட்டர் இந்தியா தரப்பிலிருந்து இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்