Skip to main content

புதுச்சேரி மாநில அந்தஸ்துக்காக போராடுவோம்- மத்திய அரசுக்கு நாராயணசாமி பதிலடி!

Published on 24/07/2019 | Edited on 24/07/2019

 

புதுச்சேரி சட்டமன்ற சிறப்பு கூட்டம் நேற்று இரண்டாவது நாளாக நடைபெற்றது.  கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ, “ நாடாளுமன்றத்தில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தொடர்பாக வைத்திலிங்கம் எம்.பி. கேட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடையாது என்று கூறியுள்ளார். மாநில அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பாக மத்திய அரசு உள்ளது. மக்களின் உணர்வுகளை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும்” என்றார். 

n

 

அதற்கு அரசு கொறடா அனந்தராமன், “ இதற்காக மத்திய அரசை கண்டித்து தீர்மானம் போட வேண்டும’ என்றார். மீண்டும் அன்பழகன், “ இதேநிலை நீடித்தால் புதுச்சேரி மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒரு துறையாகவே இருக்க நேரிடும். நாம் மாநில அந்தஸ்தை பெறவேண்டும்” என்று மீண்டும் வலியுறுத்தினார்.

 

இவற்றிற்கு பதிலளித்த முதலமைச்சர் நாராயணசாமி, “ நாடாளுமன்றத்தில் வைத்திலிங்கம் எம்.பி. எழுப்பிய கேள்விக்கு உள்துறை இணை மந்திரி அந்த பதிலை அளித்துள்ளார். புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அனைத்துக்கட்சி தலைவர்களையும் அழைத்துச் சென்று உள்துறை மந்திரி மற்றும் மத்திய மந்திரிகளை சந்தித்து வலியுறுத்தினோம். அப்படி இருந்தும் மத்திய அரசு புதுவை மக்களின் உணர்வுகளை மதிக்கவில்லை. மத்திய மந்திரியின் பதில் வருத்தத்தை அளிக்கிறது. இருந்தபோதிலும் மாநில அந்தஸ்து பெற தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம்” என்றார். 

 

p

 

இதேபோல் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த கூடாது என மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை  நாராயணசாமி கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தின் மீது பேசிய பா.ஜ.க உறுப்பினர்கள், சுவாமிநாதன், சங்கர் ஆகியோர், “ ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை விளக்கி கூற வேண்டும். திட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த திட்டத்தை செயல்படுத்தும் போது பொதுமக்களுக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டால் திட்டத்தை நாங்கள் எதிர்க்க தயாராக இருக்கிறோம்’ என்றனர். காங்கிரஸ் உறுப்பினர்கள் அனந்தராமன் தனவேலு, பாலன், விஜயவேணி, என்.ஆர்.காங்கிரஸ் சந்திரபிரியங்கா, தி.மு.க உறுப்பினர்கள் கீதா ஆனந்தன், வெங்கடேசன், அ.தி.மு.க உறுப்பினர்கள் அன்பழகன், அசனா ஆகியோர் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயம் பாதிக்கும், மீனவர்களின் வாழ்வாதாராம் பாதிக்கும்” என்றனர்.  

 

இவற்றிற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, “ கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காரைக்கால் பகுதியில் வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனங்கள் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது சட்டமன்ற கூட்டம் நடந்து வந்தபோது அமைச்சர் கமலக்கண்ணன் பிரச்சினை எழுப்பினார். அப்போது புதுவையில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள மாநில அரசு அனுமதிக்காது என்று தெளிவாக கூறி இருந்தேன். ஆனால் தற்போது அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. புதுவையில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள அனுமதி கோரி நமக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பி உள்ளது. 

 

அந்த கோப்பை நான் அமைச்சர் கந்தசாமிக்கு அனுப்பி வைத்தேன். அவர் அதை பார்த்து விட்டு புதுவையில் எங்கள் அரசு அனுமதி வழங்காது என்று என்னிடம் திருப்பி அனுப்பினார். அதனை வைத்து நான் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளேன். புதுவை மாநிலம் சிறிய பகுதி. இங்கு பேசும் உறுப்பினர்கள் இந்த திட்டத்தை கொண்டு வந்தால் என்ன பாதிப்பு ஏற்படும் என்று கேட்கின்றனர். அதனை நான் எனது தீர்மானத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்.

 

விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். நீர்மட்டம் கீழே சென்று விடும். தண்ணீர் மாசு ஏற்படும். காற்றில் நச்சு தன்மை கலக்கும். ஒட்டு மொத்தமாக பாதிப்பு ஏற்படும். எனவே புதுவை மாநிலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என பிரதமருக்கும், மத்திய பெட்ரோலிய துறை மந்திரிக்கும் கடிதம் எழுதினேன். பெட்ரோலிய துறை மந்திரி இதனை பரிசீலனை செய்வதாக எனக்கு பதில் அனுப்பியுள்ளார். மக்களின் வாழ்வாதாரம் தான் முக்கியம். பொதுமக்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டும். திட்டத்தால் பாறைகள் உடையும். பூகம்பம் ஏற்படும் சூழ்நிலை உருவாகும். மக்கள் நலன் தான் எங்களுக்கு முக்கியம்” என்றார். 

 

இதனை தொடர்ந்து அந்த தீர்மானத்தின் மீது சபாநாயகர் சிவக்கொழுந்து குரல் வாக்கெடுப்பு நடத்த அனுமதித்தார். இதனையடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

 
 

சார்ந்த செய்திகள்