
கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில் இழந்த ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும், இருக்கும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.
பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோன்று காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட தலைவர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததால் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக காங்கிரஸ் கட்சி கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த 25 ஆம் தேதி வெளியிட்டுள்ளது. அதில், 124 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட காங்கிரஸ், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா வருணா தொகுதியிலும், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கனகபுரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

அதேபோல், கடந்த 26 ஆம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக கர்நாடக மாநிலத்திற்குச் சென்ற பிரதமர் மோடி, தாவணகெரே பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், “கர்நாடகாவை கட்சிக்காரர்களின் ஏடிஎம் மெஷினாக கருதுகிறது காங்கிரஸ்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், கர்நாடக சட்டமன்றத்தின் ஆயுட்காலம் மே மாதத்துடன் நிறைவடைவதைத் தொடர்ந்து, அம்மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று காலை 11.30 மணிக்கு அறிவிக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.