இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை தாக்கம் படிப்படியாகக் குறைந்துவரும் சூழலில், பல மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பிவருகிறது. பள்ளிகள், போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மஹாராஷ்ட்ராவில் கரோனா இரண்டாம் அலை தாக்குதல், இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு அதிகமாக இருந்தது. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மின்சார ரயில் போக்குவரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுவந்தது. அரசு ஊழியர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் மட்டுமே மின்சார ரயிலில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் அனைவரையும் ரயில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை விடுக்கப்படுவதால், முதற்கட்டமாக இரண்டு டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மஹாராஷ்ட்ராவில் 19 லட்சம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.