நாடு முழுவதும் நடைபெற்ற 17-வது மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் மே -23 ஆம் தேதி எண்ணப்பட்டது. இதில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பாஜக கட்சி மட்டுமே தனித்து 303 இடங்களை கைபற்றியது. இந்நிலையில் மக்களவைக்கு சோனியா காந்தி, மேனகா காந்தி, கனிமொழி, ஸ்மிருதி இரானி உட்பட 78 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த 16- வது மக்களவையில் 62 பெண் உறுப்பினர்கள் இருந்த நிலையில், தற்போது 16 உறுப்பினர்கள் அதிகரித்துள்ளன. இருப்பினும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறாமல் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் 47 பெண் வேட்பாளர்களையும், காங்கிரஸ் கூட்டணி சார்பில் 54 பெண் வேட்பாளர்கள் உட்பட 700 பெண் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் ஒவ்வொரு மக்களவையிலும் பெண் உறுப்பினர்கள் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இருந்து கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, தென் சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் என மூன்று பெண் உறுப்பினர்கள் மக்களவைக்கு செல்ல இருக்கின்றனர்.