Skip to main content

“தன்னுடைய மாற்றுக் கருத்துகளை ஒதுக்கி வைக்க வேண்டும்” - மம்தாவுக்கு ஜெய்ராம் ரமேஷ் கோரிக்கை

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
Jairam Ramesh requests Mamata to put aside her alternative views

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன.

இதனிடையே, பா.ஜ.க.வை வீழ்த்துவதற்காக 25க்கும் மேற்பட்ட எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி தங்களது ஆதரவை பெறுக்கி வந்தனர். ஆனால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்றும் பா.ஜ.க.வை வீழ்த்துவதற்கு இந்தியா கூட்டணியில் தொடர்ந்து செயல்படுவேன் என்றும் கூறினார்.

அதே வேளையில், பானர்ஜி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடி வருகிறார். இதனால், திரிணாமுல் காங்கிரஸுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், மத்திய அரசை கண்டித்து கடந்த 2ஆம் தேதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மம்தா பானர்ஜி பேசியதாவது, “மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 300 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று கூறினேன். ஆனால், அவர்கள் அதற்கு செவிசாய்க்கவில்லை. 

இப்போது மேற்கு வங்கத்தில் இஸ்லாமிய வாக்குகளை குறிவைத்து பயணிக்கின்றனர். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளிலாவது வெற்றி பெறுமா? என்பது சந்தேகம் தான். உங்களுக்கு தைரியம் இருந்தால் வாரணாசியில் பா.ஜ.க.வை தோற்கடியுங்கள்.  நீங்கள் முன்பு வெற்றி பெற்ற இடங்களில் கூட தோல்வியடைவீர்கள். அலகாபாத், வாரணாசி தொகுதிகளில் வெற்றி பெறுங்கள். நீங்கள் எவ்வளவு தைரியமான கட்சி என்று பார்ப்போம்” என்று கூறி கடுமையாக சாடியிருந்தார்.

இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “மம்தா பானர்ஜி மனதில் எந்த சந்தேகமும் வரக்கூடாது. நாங்கள் நிச்சயமாக உத்தர பிரதேசத்துக்கு செல்வோம். மம்தா பானர்ஜி காங்கிரஸ் கட்சியை பற்றி நிறைய விஷயங்களை கூறியிருக்கிறார். ஆனால், நான் தற்போது எதுவும் சொல்ல விரும்பவில்லை. நடக்க இருப்பது சட்டமன்றத் தேர்தல் கிடையாது என்பதை மம்தா பானர்ஜி புரிந்து கொள்ள வேண்டும். மாநில அளவில் நமக்கிடையே இருக்கும் மாற்றுக் கருத்துக்களை ஒதுக்கி வைத்துவிட்டு தேசிய கண்ணோட்டத்தில் சிந்திக்க வேண்டும். பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் கொள்கைக்கு எதிராக போராடுவது நமது ஒரே இலக்கு” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்