அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராகக் கூட்டணி அமைப்பது குறித்துப் பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசி வருகின்றனர். அந்த வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர்களின் 2 ஆவது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் கடந்த ஜூலை மாதம் 17 மற்றும் 18 ஆகிய இரு தேதிகளில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் மூன்றாவது இரண்டு நாள் கூட்டம் நேற்று தொடங்கியது. நேற்று மும்பையில் நடந்த கூட்டத்தில் 28 கட்சிகளைச் சேர்ந்த 65 தலைவர்கள் கலந்து கொண்டனர். இன்று இரண்டாவது நாள் கூட்டம் தொடங்கிய நிலையில், பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்தியா கூட்டணி, ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை உருவாக்கி அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 13 பேர் கொண்ட இந்த ஒருங்கிணைப்புக் குழுவில் கே.சி. வேணுகோபால், சரத்பவார், ராகவ் சத்தா, அபிஷேக் பானர்ஜி, டி. ராஜா, மு.க. ஸ்டாலின், ஹேமந்த் சோரன், உமர் அப்துல்லா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த ஒருங்கிணைப்புக் குழுவில் காங்கிரசை சேர்ந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி உட்பட அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் இடம்பெறவில்லை. அதேபோல் இந்த ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் யார் என்றும் அறிவிக்கப்படவில்லை.