நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20 ஆம் தேதி தொடங்கி, இந்த மாதம் (ஆகஸ்ட்) 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் துவங்கிய கடந்த 20 ஆம் தேதி முதல் தொடர்ந்து 9 நாட்களாக நேற்று வரை இரு அவைகளும் முடங்கி வருகிறது.
மணிப்பூரில் இரு பெண்களுக்கு நடந்த கொடூரம் தொடர்பாகவும், மணிப்பூர் விவகாரம் தொடர்பாகவும் விவாதம் நடத்த வேண்டும் எனவும், பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வந்து விளக்கம் தரவேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இதற்கிடையில் கடந்த 26 ஆம் தேதி மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் மக்களவைத் துணைத் தலைவர் கௌரவ் கோகோய் மற்றும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் பி.ஆர்.எஸ் கட்சி எம்.பி. நாகேஸ்வரராவ் தரப்பில் நம்பிக்கையில்லாத் தீர்மான நோட்டீஸ் மக்களவையில் வழங்கப்பட்டது. இதையடுத்து மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கான நோட்டீஸை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டு, தீர்மானத்தின் மீதான விவாதம் நடத்தும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார். அப்போது எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சிலர், நம்பிக்கையில்லாத் தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டதில் இருந்து 10 நாட்களுக்குள் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்பது நாடாளுமன்ற விதி என்று தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று காலை மக்களவை ஒத்திவைக்கப்பட்ட பிறகு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தின் போது பிரதமர் மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது ஆகஸ்ட் 8, 9 ஆம் தேதி மக்களவையில் விவாதம் நடைபெறும் என சபாநாயகர் அறிவித்தார். இந்த விவகாரத்தில், எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கு ஆகஸ்ட் 10 ஆம் தேதி பிரதமர் மோடி பதில் அளிப்பார் என அறிவித்தார்.
ஆனால், எதிர்க்கட்சிகள் சார்பாகக் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மான விவாதத்தை புதன்கிழமை (இன்று) விவாதிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். மேலும், மக்களவை விதிகளின்படி நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏற்றுக்கொண்ட பிறகு அதற்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். மத்திய அரசின் பிற அலுவல் மசோதாக்களை ஒதுக்கி வைக்க வேண்டும். ஆனால், எதிர்க்கட்சிகளின் அமளியைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டு மத்திய அரசு மசோதாக்களை நிறைவேற்றுவதிலேயே குறியாக இருக்கிறது என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குற்றம் சாட்டினர்.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மத்திய அரசு, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட பிறகு உடனடியாக விவாதம் நடத்த வேண்டும் என்று எந்த விதியும் இல்லை. அதனால், இந்த விவாதத்தை 10 நாட்களுக்குள் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று விளக்கம் கொடுத்துள்ளது. உடனடியாக விவாதத்தை நடத்த அனுமதிக்காததால் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு மற்றும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் உள்ளிட்டோர் அரசு அலுவல் ஆலோசனைக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
மணிப்பூர் கலவரம் துவங்கி 78 நாட்கள் கழித்து, மழைக்கால கூட்டத்தொடர் துவங்கிய கடந்த ஜூலை 20 ஆம் தேதி நாடாளுமன்றத்தின் வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் மோடி, “மணிப்பூர் பெண்களுக்கு எதிராக நடந்த சம்பவம் பெரும் வேதனையைக் கொடுத்துள்ளது. இதனால் எனது இதயம் கனத்துள்ளது” என்று பேசியிருந்தார். அதன்பிறகு நாடாளுமன்றத்திற்கு வந்து அவர் பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையிலும், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ளாத பிரதமர் மோடி, கூட்டத்தொடரின் இறுதி நாளுக்கு முன்தினமான வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி நாடாளுமன்ற அவைக்குள் மணிப்பூர் விவகாரம் குறித்துப் பேச இருக்கிறார்.