அதிதீவிர புயலான ஃபானி புயல் கடந்த வாரம் ஒடிசா மாநிலத்தில் கரையை கடந்தது. ஃபானி புயலால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஒடிசாவில் லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. மேலும் பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான கிராமங்கள் தனி தீவுகளாக மாறியுள்ளது.
இந்த புயலில் இதுவரை 38 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஃபானி புயலால் உருக்குலைந்த ஒடிசாவின் கடலோர பகுதிகளை பிரதமர் மோடி இன்று காலை ஹெலிகாப்டரில் இருந்து பார்வையிட்டார். இந்த ஆய்வுக்கு பின்னர் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், மோடி உள்ளிட அம்மாநில தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பேசிய பிரதமர் மோடி, " ஒடிசாவில் புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க உடனடியாக 1000 கோடி ரூபாய் வழங்கப்படும். ஏற்கனவே 381 கோடி அறிவித்த நிலையில், தற்போது கூடுதலாக இந்த 1000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.