குஜராத் மாநிலம், பரூச் பகுதியில் ஜாகாதியா இடத்தில் தனியார் பொறியியல் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்த 10 காலிப்பணியிடங்களுக்கு ஆள் சேர்ப்பதற்கான நேர்காணல் அங்கலேஷ்வர் பகுதியில் உள்ள லார்ட்ஸ் பிளாசா ஹோட்டலில் கடந்த 8ஆம் தேதி நடந்துள்ளது.
ஆனால், இந்த பணியிடங்களுக்காக 1,800 பேர் வந்ததாகக் கூறப்படுகிறது.10 இடங்கள் கொண்ட பணிக்கு 1,000க்கும் மேற்பட்டோர் வந்ததால் அங்கு கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. ஹோட்டலில் நுழைவு வாயிலின் இரு பகுதியிலும் நூற்றுக்கணக்கானோர் நெருக்கியடித்து உள்ளே புகுந்துள்ளனர். சிலர் கதவுக்கு வெளியே ஒருவரையொருவர் முட்டி மோதியபடி உள்ளே சென்றனர். மேலும், தடுப்புக்காகப் போடப்பட்டிருந்த உலோக வேலியும் தள்ளப்பட்டு அந்த இடமே பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் கட்சி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு, பா.ஜ.கவை கடுமையாகச் சாடியுள்ளது. மேலும், இந்த மாதிரி வேலையில்லாத் திண்டாட்டத்தை ஆளும் கட்சி, இப்போது நாடு முழுவதும் திணிக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளது.