கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் மனைவியிடம் பேரம் பேசியதாக காங்கிரஸார் குற்றம்சாட்டுகின்றனர்.
கர்நாடக சட்டசபையில் இன்று காலை எம்.எல்.ஏ.க்களுக்கான பதவிப்பிரமாணம் தொடங்கியது. எடியூரப்பா முதல்வராக பொறுப்பேற்றதை அடுத்து காங்கிரஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இன்று மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவிருக்கிறது.
இந்த வாக்கெடுப்பில் தனக்கு சாதகமாக வாக்களிக்கச் சொல்லுமாறு காங்கிரஸ் எம்.எல்.ஏ. மனைவியிடம் எடியூரப்பா பேரம் பேசியதற்கான ஆடியோ ஆதார, இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து பேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வி.எஸ்.உக்ரப்பா, ‘எடியூரப்பா காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் ஒருவரது மனைவிக்கு செல்போன் மூலம் அழைத்திருக்கிறார். அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பில் தனக்கு சாதகமாக வாக்களிக்க, உங்கள் கணவரிடம் கூறுங்கள் எனக்கூறிய அவர், அதற்கு ஆதாயமாக அமைச்சர் பதவியும், ரூ.15 கோடி பணமும் தருவதாக பேரம் பேசியிருக்கிறார்’ என குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கு முன்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. பசனகவுடாவுக்கு, பா.ஜ.க. ஆதரவாளரான ஜனார்த்தன ரெட்டி செல்போன் மூலம் தொடர்புகொண்டு ரூ.150 கோடிக்கு மேல் பேரம் பேசியதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.