‘‘2024ல் நடைபெறும் தேர்தலில், 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவதே, பிரதமரின் மக்கள் நலத் திட்டப் பிரச்சார இயக்கத்தின் நோக்கம்’’ என்று பிரதமர் மோடியின் சகோதரர் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரகலாத், நேற்று மதுரை வந்தார். அங்கிருந்து, இன்று திருச்சிக்கு வந்த அவர், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார். பிரதமர் நரேந்திர மோடியின், மக்கள் நலத் திட்டங்கள் பற்றிய பிரச்சார இயக்க துவக்க விழா நடைபெற்றது. விழாவில், இயக்கத்தின் தேசிய தலைவரும், பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரருமான பிரகலாத் மோடி கலந்து கொண்டார்.
அதன் பின் அவர் கூறியதாவது, மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களைப் பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக, கடந்த 2018ம் ஆண்டு, பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளன்று, பிரதமரின் மக்கள் நலத் திட்டப் பிரச்சார இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தில், 25 லட்சத்துக்கு மேற்பட்ட தொண்டர்கள் இணைந்துள்ளனர். அவர்களை, 25 கோடியாக உயர்த்த வேண்டும்.
மத்திய அரசின் பல திட்டங்கள், மக்களிடம் கொண்டு செல்லப்படவில்லை. அவற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். எங்களின் பிரச்சாரத்திற்கும், தேர்தலுக்கும் தொடர்பு இல்லை என்று கூறவில்லை. மக்கள் சேவை மற்றும் தேர்தல் பிரச்சாரம் ஆகியவற்றை மையப்படுத்தியே இந்த இயக்கம். வரும் 2024ல் நடைபெறும் பார்லிமெண்ட் தேர்தலில், 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவதற்காக இந்த இயக்கம் செயல்படுகிறது எனத் தெரிவித்தார்.