கதிராமங்கலத்தில் ஒ.என்.ஜி.சி. குழாயில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
தஞ்சை கும்பகோணத்தை அடுத்த கதிராமங்கலம் கிராமத்தில் உள்ள ஒ.என்.ஜி.சி. குழாய்களில் கடந்த ஆண்டு ஜீன் 30ஆம் தேதி உடைப்பு ஏற்பட்டதையடுத்து ஒ.என்.ஜி.சி. பணிகளை நிறுத்தக்கோரியும், ஒ.என்.ஜி.சி. கதிராமங்கலத்தை விட்டு வெளியேற வேண்டும் எனவும் அந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கிராம மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். பதிலுக்கு கிராம மக்களும் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர், இதனால் அப்பகுதியே பெரும் களேபரமாக மாறியது. எண்ணெய் கசிவு ஏற்பட்ட இடத்தில் போலீசாரே தீ வைத்துவிட்டு மக்கள் மீது பழி போடுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.
போராட்டத்தில் ஈடுபட்டதாக 12 பேர் மீது வழக்குப்போடப்பட்டு சிறையில் அடைத்தது காவல்துறை. அவர்களை விடுவிக்கவேண்டுமென, வர்த்தக சங்கத்தினர், பள்ளிக்கல்லூரி மாணவர்கள், அரசியல், அரசியல் அல்லாத இயக்கங்கள் என தொடர் போராட்டம் நடத்தினர். பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
ஆனாலும் 200 நாட்களை தாண்டியும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் வெள்ளிக்கிழமை கதிராமங்கலம் - குத்தாலம் இடையே விளைநிலத்தில் செல்லும் எண்ணை குழாய் வெடித்து எண்ணை வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.