
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி அருகே காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் ஞானவாபி மசூதி என்னும் இஸ்லாமிய வழிபாட்டுத்தலம் ஒன்று உள்ளது. இங்கு இந்து மதக் கடவுளான சிவலிங்கம் ஒன்று கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மசூதியில் கண்டறியப்பட்ட லிங்க வடிவிலான பொருளின் காலத்தைக் கண்டுபிடிக்கத் தடயவியல் பரிசோதனை செய்ய அனுமதிக்கக்கோரி 5 பெண்கள் சார்பில் கடந்த 2022ஆம் ஆண்டு வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, இந்த மனுவை விசாரித்த வாரணாசி மாவட்ட நீதிமன்றம், ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொள்ள அனுமதி அளித்து இருந்தது. அதன்படி காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே தொல்லியல் நிறுவனம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என நிபந்தனை விதித்துள்ள நீதிமன்றம், ஞானவாபி மசூதியில் தொழுகை நடத்த எந்தத் தடையும் இதனால் ஏற்படக்கூடாது எனத் தெரிவித்து இருந்தது. மசூதி முழுவதிலும் ஆய்வு மேற்கொள்ள இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்திற்கு அனுமதி அளித்திருந்தது. மேலும், தடய அறிவியல் ஆய்வறிக்கையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்கு முன் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வழக்கை விசாரித்த நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.
அதனைத் தொடர்ந்து, இந்த உத்தரவை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இதனையடுத்து, ஞானவாபி மசூதியில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள இந்தியத் தொல்லியல் துறைக்கு இடைக்காலத்தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. மேலும், வாரணாசி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அலகாபாத் நீதிமன்றத்தை நாட உச்சநீதிமன்றம் மனுதாரர்களுக்கு அறிவுறுத்தி இருந்தது.
இதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் படி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில், ஞானவாபி மசூதியில் ஆய்வுக்கு அனுமதிக்கக் கூடாது என்று இஸ்லாமிய அமைப்பின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்த போது, ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்ததுடன், மசூதியில் ஆய்வுக்கு அனுமதிக்கக் கூடாது என்ற இஸ்லாமிய அமைப்பின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதனிடையே, ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த தொல்லியல் துறைக்கு அனுமதி அளித்ததன் அடிப்படையில், தொல்லியல் துறை ஆய்வாளர்கள் வாரணாசி நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில், ஞானவாபி மசூதியில் 55 இந்து தெய்வ சிற்பங்கள் கண்டறியப்பட்டதாக விவரிக்கப்பட்டிருந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு நேற்று (31-01-24) விசாரணைக்கு வந்தது. அப்போது, ஞானவாபி மசூதியின் தெற்கு பகுதியில் இந்துக்கள் வழிபாடு நடத்தலாம் என அதிரடி உத்தரவை வாரணாசி நீதிமன்றம் பிறப்பித்தது. மேலும், அங்கு வழிபாடு நடத்துவதற்காக அர்ச்சகரை நியமிக்க காசி விஸ்வநாதர் அறக்கட்டளைக்கு உத்தரவிட்டது. இந்து தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அடுத்த 7 நாள்களுக்கு அங்கு பூஜைகள் நடத்தப்படும் என நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. வாரணாசி நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து ஞானவாபி மசூதி நிர்வாகம் மேல்முறையீடு செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.