ஜூன் 1 முதல் தங்களது கடைகளைத் திறக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும், இனிமேலும் கடைகளைத் திறக்க முடியவில்லை என்றால் எங்களால் தாங்க முடியாது என்கின்றனர் வண்ணாரப்பேட்டை ஜவுளி வர்த்தகர்கள்.
வண்ணாரப்பேட்டை கட்பீஸ் வியாபாரிகள் சங்க சரவணக்குமார் நம்மிடம் பேசுகையில், ''சென்னை வண்ணாரப்பேட்டை எம்.சி. ரோட்டில் துணிக்கடைகள் உள்ளன. இந்தத் துணிக்கடைகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். மறைமுகமாக 5 ஆயிரம் பேர் வேலை செய்கிறார்கள். மொத்தம் 10 ஆயிரம் பேர் வேலை செய்கிறார்கள். அவர்களுடைய வாழ்வாதாரமும், இங்கு உள்ள துணிக்கடை வைத்திருப்பர்களின் வாழ்வாதாரமும் மிகப் பெரிய அளவில் கேள்விக்குறியாகி உள்ளது. எம்.சி. ரோட்டில் தினமும் ரூபாய் 25 கோடியில் இருந்து 30 கோடி வரை வர்த்தகம் நடைபெறும் இடம். இப்போது மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
துணிக்கடை வைத்திருப்பவர்களுக்கு என்ன பாதிப்பு என்றால், கடை வாடகை, வரி, மின்சாரக் கட்டணம் கட்ட வேண்டும். இதைவிட முக்கியமானது எங்களது தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும். எங்களால் முடிந்தவரை மார்ச் மாதச் சம்பளத்தைக் கொடுத்துவிட்டோம். ஏப்ரல் மாதத்திலேயும் பாதிச் சம்பளம் கொடுத்துவிட்டோம். இனிமேலும் சம்பளம் கொடுக்க வேண்டும் என்றால் எங்களது கடைகளைத் திறந்தால்தான் எங்களது தொழிலாளர்களுடைய வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற முடியும். அதற்குத் தமிழக அரசு எங்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள டி.நகரில் கடைகள் திறக்கப்பட்டுள்ளது, புரசைவாக்கத்தில் கடைகள் திறக்கப்பட்டுள்ளது, சென்னையில் பெரும்பாலான இடங்களில் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. கடைகள் திறக்கப்படாதது வண்ணாரப்பேட்டை மற்றும் குடோன் தெரு ஆகியவைதான். முகக் கவசம், கைக் கழுவும் திரவம், சமூக இடைவெளி எனத் தமிழக அரசு சொல்லக்கூடிய அனைத்துக் கட்டுப்பாட்டுக்களையும் நாங்கள் கடைப்பிடிக்கிறோம்.ஏ.சி.யை இயக்க மாட்டோம் என தெரிவித்திருக்கிறோம்.
எல்லா பண்டிகைகளும் தற்போது முடிந்துவிட்டது. இப்போது எந்தப் பண்டிகைகளும் இல்லை. பிறகு ஏன் கடைகள் திறக்க வேண்டும் என்ற கேள்வி எழலாம். கடைகளைத் திறந்தால்தான் பாதி சம்பளமாவது தொழிலாளர்களுக்கு கொடுக்க முடியும். 65 நாட்களுக்கும் மேலாகக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் எங்களிடம் வாங்கக் கூடிய சிறு வியாபாரிகள், அண்டை மாநிலங்களுக்கு செல்கிறார்கள். இதனால் வர்த்தகம் பாதிக்கப்படுகிறது.
கரோனா சிறப்பு அதிகாரி இராகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி கமிஷ்னர் உள்பட அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளோம். அவர்கள் முதலமைச்சரிடம் பேசி சொல்கிறோம் என்கிறார்கள். நல்ல முடிவு வரும் எனக் காத்திருக்கிறோம். வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் கடை திறக்க அனுமதி அளித்தாலும் நன்றாக இருக்கும். எங்களால் தாங்க முடியும் வரை தாங்கிக்கொண்டோம். இனிமேலும் கடையைத் திறக்க முடியவில்லை என்றால் எங்களால் எதுவும் செய்ய முடியாது என்றார் வேதனையுடன்.