திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத் நகர் பகுதியில் உள்ள மீன் சந்தையால் பொதுமக்களுக்கும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் இடையூறு ஏற்படுவதாக கூறி அந்த மீன் சந்தையை அகற்ற வேண்டும் என்று பா.ஜ.க வினர் போராட்டம் நடத்த அறிவித்திருந்தனர். இந்த நிலையில் தேசிய செயலாளர் எச்.ராஜா தலைமையில் 20 ந் தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரதம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பை பார்த்த மாலை முரசு தொலைக்காட்சியின் சப் எடிட்டர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள அதிராம்பட்டிணம் கிராமத்தைச் சேர்ந்த ஜகுபர் அலி மகன் நூருல் அகமது ( 23 ) தனது முகநூலில், சாகும்வரை உண்ணாவிரதமா? இல்லை சாக்கு போக்கு சொல்லி முடிப்பார்களா? என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவைப் பார்த்த முத்துப்பேட்டை பா.ஜ.க வினர் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று அதிராம்பட்டிணம் வந்த நூருல் அகமதுவை முத்துப்பேட்டை போலிசார் கைது செய்து விசாரனை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் முத்துப்பேட்டை பகுதி மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்திலும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. அரசியல்வாதிகளை விமர்சனம் செய்ய கூடாதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.