தி.மு.க. அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டுள்ளார். நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக வந்த புகார்களின் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆர்.எஸ்.பாரதியை ஜாமீனில் விடுவிக்க தி.மு.க. வழக்கறிஞர் அணி நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் தி.மு.க. அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதி, கலைஞர் வாசகர் வட்ட விழாவில் கலந்து கொண்டு பேசி இருந்தார். அப்போது அவர் நீதிபதிகள் நியமனம் தொடர்பாகத் தெரிவித்த கருத்துகள், தாழ்த்தப்பட்ட மக்களை அவமதிக்கும் வகையில் இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதுதொடர்பாக ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாண்குமார் தேனாம்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதில் ஆர்.எஸ்.பாரதி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. புகாரின் அடிப்படையில் சென்னை ஆலந்தூரில் உள்ள தனது விட்டில் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆர்.எஸ்.பாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
''கரோனா தடுப்பு பொருட்கள் வாங்கியதில் ரூபாய் 200 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது என்று தான் சொன்னதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாரையோ திருப்திப்படுத்த என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, கரோனா சூழலில் தனிமைப்படுத்தி கொண்டிருந்த நிலையில் கைது செய்துள்ளனர். சீப்பை மறைத்து வைத்தால் கல்யாணம் நிற்காது'' என்று ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார். கரோனா காலத்தில் மக்களைத் திசை திருப்பும் முயற்சியாக ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என்று தமிழக அரசுக்கு தி.மு.க.வினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.