கரோனோ பரவலைத் தடுப்பதற்கு ஊரடங்கு தனிமைப்படுத்தல், சமூக இடைவெளி என மத்திய, மாநில அரசுகள் தொடர்ச்சியாக அறிவுறுத்தி வரும் நிலையில், திருச்சி மத்தியச் சிறையில் உள்ள காவலர்கள் விருப்ப இடமாற்றம் வழங்கப்பட்டதைக் கொண்டாடி மது போதையில் ஆடிய ஆட்டம் சிறைத்துறை உயர் அதிகாரிகளின் கோபத்திற்குள்ளாகி அவர்களின் இடமாற்றமே ரத்து செய்ய்யப்படுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சிறைச்சாலைகளில் இரண்டாம் நிலை சிறைக்காவலர்களாகப் பணிபுரிபவர்களுக்கு விருப்பத்தின் அடிப்படையில் இடமாறுதல் வழங்கப்பட்டது. அந்த வகையில் திருச்சியில் உள்ள மத்தியச் சிறையில் இருந்து 37 பேர் மற்றும் கிளைச்சிறைகளில் இருந்து 6 பேர் என ஆக மொத்தம் 43 பேர் இரண்டாம் நிலை காவலர்களின் விருப்பத்தின் பெயரில் இடமாறுதல் வழங்கப்பட்டது.
விருப்ப இட மாற்றத்தைக் கொண்டாடும் விதமாகச் சிலர் கடந்த 20ஆம் தேதி மத்திய குடியிருப்பு வளாகத்தில் மதுவிருந்து நடத்தியிருக்கிறார்கள். போதை தலைக்கு ஏரியதும் டூவிலரில் குடியிருப்பு வளாகத்தில் சுற்றிவந்து கூச்சலிட்டு அலப்பறை செய்திருக்கிறார்கள்.
மேலும் மைதானத்தில் அமர்ந்து மது அருந்தியிருக்கிறார்கள். இதை வீடியோவாக எடுத்து முகநூலில் வெளியிட்டு உள்ளனர். மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டியவர்கள் இப்படி ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டது சிறை வட்டாரத்தின் உயர் அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஏன் இப்படி நடந்து கொண்டார்கள் என்றும் அவர்களை விசாரித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இதன் அடிப்படையில் மது விருந்து நடத்தி தலைமை ஏற்று ரகளையில் ஈடுபட்டவர்கள் என்று பட்டியல் தயாரித்து அதன் அடிப்படையில் முதல் கட்டமாக 9 பேர் மீது கே.கே.நகர் காவல்நிலையில் சிறை அதிகாரிகளின் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த நிலையில் விருப்ப இடமாற்றத்தை இப்படி மட்டரகமாக மது அருந்தி கொண்டாடியதால் 37 பேரின் விருப்ப இடமாற்றத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர். சிறைத்துறை அதிகாரிகளின் இந்த மாதிரியான அதிரடி நடவடிக்கை மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.