தூத்துக்குடி மண்ணில் மனித ஜீவராசியே வாழ தகுதியற்றதாக ஆக்கிக்கொண்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, கடந்த மே 22ஆம் தேதி தூத்துக்குடி மாநகர மக்கள் தன்னெழுச்சியாக சுமார் 30 ஆயிரம் பேர் கிளம்பிய அமைதி பேரணியில், தடியடி ஏற்படுத்தி துப்பாக்கிச் சூடு வரை கொண்டுபோன காவல்துறையின் அத்துமீறலால் 13 பேரின் உயிர்கள் பலியாகின. 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுதவிர தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை கணக்கில் வரவில்லை. காரணம், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றால் தங்களின் மீது கொடூரமான வழக்குகள் பாயலாம் என்ற அச்சம் காரணமாக பலர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக செல்லவில்லை. இந்த துப்பாக்கிச் சூட்டினை அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் கண்டித்தன. இதைத் தவிர டெல்லி உயர்நீதிமன்றம் வரை துப்பாக்கிச் சூட்டின் தாக்கம் எதிரொலித்தது.
உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி டெல்லியின் தேசிய மனித உரிமை ஆணையம் விசாரிக்க பணித்தது. அதன் அடிப்படையில் அந்த ஆணையத்தின் சக்தி வாய்ந்த விசாரணை அதிகாரியான எஸ்.பி.பபுல்தத்தா பிரசாத் தலைமையில் 4 போலீஸ் அதிகாரிகள் விசாரணைக்காக தூத்துக்குடிக்கு கடந்த 3ஆம் தேதிக்கு வந்தனர்.
அவர்கள் சேதங்களை பார்வையிட்டனர். பின்னர் போலீஸ் அதிகாரிகளை விசாரித்தனர். இதனிடையே தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஒரு நபர் விசாரணை கமிஷனான ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நேற்று மாலை தூத்துக்குடி வந்தார். வந்தவுடன் நேற்று மாலையே அவர் விசாரணையை தொடங்கினார். மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி. மற்றும் ஐ.ஜி. உள்ளிட்ட அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார்.
அதன் பிறகு இன்றைய தினம், தூத்துக்குடி பீச் ரோட்டில் உள்ள பழைய அரசினர் விருந்தினர் மாளிகையில் தங்கி விசாரணை நடத்தினார். அதுசமயம் அவர் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்மந்தமாக இறந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோரிடம் நடந்ததை மனுக்களாக தரலாம் என்று கூறினார்.
மருத்துவமனையில் இருந்த சோரீஸ்புரத்தைச் சேர்ந்த முத்துராஜ் என்பவர் நீதிபதியை சந்தித்தார். அப்போது அவர் நீதிபதியிடம், தான் கலெக்டர் அலுவலகத்தில் இருந்தபோது தடியடியாலும், துப்பாக்கிச் சூட்டாலும் மக்கள் கலைந்து ஓடினார்கள். நானும் ஓடினேன். அப்போது எனது வலது விலாவில் துப்பாக்கி குண்டு துளைத்து சென்றது. நான் மயங்கிவிட்டேன். என்னை மருத்துவமனையில் சேர்த்தார்கள். மேலும் என் மீது வழக்கு பாயுமோ என்ற கவலையும் இருக்கிறது என்று நீதிபதியிடம் வாக்குமூலம் கொடுத்தார். அதற்கு நீதிபதி, வழக்குகளை பார்த்துக்கொள்ளலாம் என்று ஆறுதல் சொன்னார்.
இதையடுத்து, டெல்லி தேசிய ஆணையக் குழுவினர் தூத்துக்குடி மில்லர் புரத்தில் மேற்கு பகுதியில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தங்கி, விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று மூன்றாவது நாளாக நடந்த விசாரணையில் பேரணி கிளம்பிய தூத்துக்குடியில் பனிமய மாதா ஆலயத்தில் இருந்து 8 கி.மீ. தாண்டி 3வது மைல் வரை சென்ற பேரணியில் வழியோரங்களில் காவலுக்காக நிறுத்தப்பட்டிருந்த தலைமைக் காவலர்கள், உதவி ஆய்வாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் டிஎஸ்பி போன்ற அதிகாரிகள் மற்றும் வருவாய் துறையினருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களிடம் ஒரு சில ஆய்வாளர்கள் தங்களது வாக்குமூலத்தை தமிழில் பதிவு செய்து கொண்டு போனார்கள். அதை வாங்கிப் பார்த்த சீனியர் எஸ்.பி. பிரசாத், தமிழ் எங்களுக்கு தெரியாது, அதனால் ஆங்கிலத்தில் உங்களது வாக்கு மூலங்களை பதிவு செய்து வர வேண்டும் என்று திருப்பி அனுப்பிவிட்டார்.
விசாரணை நடக்கும் பகுதிக்குள் பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனிடையே தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சுமார் 42 பேரில் 16க்கும் மேற்பட்டோர் இன்று மதியம் டிஸ்சார்ஜ் செய்து அனுப்பப்பட்டனர்.
தேசிய மனித உரிமை ஆணையம் நாளை வரை தங்கி விசாரணை முடித்துக்கொண்டு திரும்புகிறது. வரும் 18 அல்லது 20ஆம் தேதிக்குள் இந்த ஆணையம் தனது ஆய்வறிக்கையை ஆதாரங்களுடன் உயர்நீதிமன்றத்திலும், ஆணையத்திலும் சமர்பிக்க இருக்கிறது.