பொதுமுடக்கத்தை நீட்டிப்பது பற்றி முடிவெடுக்க மருத்துவ வல்லுநர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். மே 25- ஆம் தேதி ஆலோசித்த நிலையில் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக மருத்துவ வல்லுநர்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்து வருகிறார். மேலும் பொதுமுடக்கத்தை நீட்டித்தால் என்னென்ன தளர்வுகள் அளிக்கலாம் என்பது குறித்தும் முதல்வர் ஆலோசித்து வருவதாகத் தகவல் கூறுகின்றன. மருத்துவ வல்லுநர்களுடனான ஆலோசனைக்குப் பிறகு பொதுமுடக்கம் தளர்வா? நீட்டிப்பா? என்பதை தமிழக அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட நான்காவது பொதுமுடக்கம் நாளையுடன் நிறைவு பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.