இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த ‘லவ் ஜிகாத்’ விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது தேசிய விசாரணை அமைப்பு எனப்படும் என்.ஐ.ஏ.
கேரளாவைச் சேர்ந்த அகிலா எனும் இந்து மதத்தைச் சார்ந்த இளம்பெண், சஃபின் ஜெகான் எனும் இஸ்லாமிய இளைஞரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். அதோடு இஸ்லாமியராக மதம்மாறிய அந்தப்பெண் தன் பெயரை ஹதியா என்றும் மாற்றிக் கொண்டார். இதனை விரும்பாத ஹதியாவின் தந்தை அசோகன் வழக்குத் தொடர்ந்து கேரள உயர்நீதிமன்றத்தின் மூலம் இந்தத் திருமணத்திற்கு தடை உத்தரவு வாங்கினார். மேலும், ஹதியா வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார்.
இதையடுத்து, உச்சநீதிமன்றம் சென்ற ஹதியா - சஃபின் தரப்பு, தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி வந்தது. உச்சநீதிமன்றமும் ‘திருமணம் என்பது தனிப்பட்டவரின் விருப்பம்; அதில் யாரும் தலையிட முடியாது’ என தீர்ப்பளித்து ஹதியாவை சஃபினுடன் அனுப்பிவைத்தது. ஆனால், இது தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணை நடத்தவேண்டும் என்ற உத்தரவையும் அந்தத் தீர்ப்பில் பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், மாற்று மதத்தவரைத் திருமணம் செய்துகொண்டதாக பெற்றோர்கள் கொடுத்திருந்த 89 வழக்குகளில் இருந்து, 11 வழக்குகளை மட்டும் எடுத்து விசாரணையில் இறங்கியது என்.ஐ.ஏ. இதில் நான்கு இந்து இளைஞர்கள் இஸ்லாமிய மதத்தைத் தழுவியிருந்தனர். மற்ற வழக்குகளில் இந்துப் பெண்கள் இஸ்லாமிய மதத்தை ஏற்றுக் கொண்டிருந்தனர். இதுதொடர்பான விசாரணை நடந்து முடிந்துள்ள நிலையில், எந்தவித ஆதாரமும் இல்லாமல் போனதால் விசாரணையை முடித்துக் கொள்வதாக என்.ஐ.ஏ. அமைப்பு அறிவித்திருக்கிறது.
இதுகுறித்து என்.ஐ.ஏ. தரப்பு, ‘மாற்று மதத்தவரைத் திருமணம் செய்து கொள்பவரை கட்டாயப்படுத்தி மதம் மாற்றம் செய்வதற்காக குறிப்பிட்ட சில நபர்களோ, அமைப்புகளோ பாப்புலர் ஃப்ரண்ட் மூலம் உதவிபெற்று செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், அவை தொடர்பாக சிறிய ஆதாரம் கூட நமக்குக் கிடைக்கவில்லை. எங்களைப் பொறுத்தவரை இதில் காதல் மட்டுமே இருந்திருக்கிறது. ஜிகாத்தைக் கண்டுகொள்ள முடியவில்லை’ என தெரிவித்திருக்கிறது.
‘ஒருவர் விருப்பத்துடன் எந்த மதத்தையும் தழுவிக் கொள்ளலாம், பின்பற்றலாம் என்கிறபோது, திருமணத்திற்குப் பிறகான மத மாற்றங்கள் குற்றமில்லை. அதற்கு லவ் ஜிகாத் சாயம் பூசம் முடியாது’ என்பதையே இந்த விசாரணை நிரூபணம் செய்துள்ளது. குறிப்பாக, மேற்குறிப்பிட்டவர்களில் மூன்று பேரை மதம் மாற்றுவதற்காக முயற்சிகள் நடந்திருந்தாலும், கட்டாயப்படுத்தியதற்கான சான்றுகள் இல்லாததால் அவை கருத்தில் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.