10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைக் கைதிகளை விடுவிக்கக் கோரி ம.ஜ.க.வினர் தமிழகம் முழுவதும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுக்க அக்கட்சியைச் சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள் சமூக இடைவெளியுடன் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். நாகை எம்.எல்.ஏ.வும் ம.ஜ.க. பொதுச்செயலாளருமான தமிமுன் அன்சாரி, துளசியாப்பட்டினத்தில் இந்தக் கோரிக்கை அடங்கிய பதாகையை ஏந்தி போராட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 10 ஆண்டுகளைக் கடந்த ஆயுள் சிறைவாசிகள் விவகாரத்தில் தமிழக அரசு கருணைக் காட்டி முன் விடுதலை செய்ய வேண்டும். இதில் சாதி, மத, வழக்குப் பேதங்களைக் காட்டக் கூடாது என வலியுறுத்தினார்.
இதுபோல் தாராபுரத்தில் தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எம்.எல்.ஏ., சென்னையில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, புதுக்கோட்டையில் TMJ K தலைவர் K.M.ஷெரிப், கும்பகோணத்தில் விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன், சென்னையில் தமிழர் நல பேரியக்கத் தலைவர் இயக்குனர் களஞ்சியம் உட்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பல தலைவர்களும் ஆங்காங்கே பங்கேற்றுள்ளனர்.