டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார். சுமார் 50 நாட்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம் கடந்த 10ஆம் தேதி அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1 வரை மட்டுமே இடைக்கால ஜாமீன் வழங்குவதற்கான உத்தரவைப் பிறப்பிப்பதாக அறிவித்த உச்சநீதிமன்றம், ஜூன் 2 ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் பிறகு, அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இதனிடையே, தனக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால், அந்த மனு நிராகரிக்கப்பட்டதால், ஜூன் 2ஆம் தேதி, அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் சரணடைந்தார்.
இதனிடையே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத்துறை தன்னை கைது செய்தது தவறு எனக் குறிப்பிட்டு டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இது தொடர்பான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள், ‘90 நாட்களுக்கு மேலாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் துயரப்பட்டிருக்கிறார். பிணையில் இருந்து ஒருவர் வெளியே வருவதற்கும், அவரிடம் விசாரணையை நடத்துவதற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. தேவைப்படும் போது விசாரணையை நடத்தலாம். பிணையில் இருந்து அவர் வெளியே வந்தால் அவரிடம் விசாரணையை நடத்த முடியாது என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு மாநிலத்தில் முதல்வராக இருக்கிறார். அவருக்கென்று சில உரிமைகள் இருக்கிறது. 90 நாட்களுக்கு மேலாக அவர் சிறையில் இருக்கிறார். ஒருவர் குற்றம் சாட்டப்பட்டவராக இருக்கிறார். அவரை கைது செய்துதான் விசாரணை நடத்துவது என்பதை நாங்கள் அனுமதிக்க முடியாது” என்று கூறி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.