மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்டு இன்றைய நாளோடு 7ஆம் ஆண்டை நிறைவு செய்கிறது. அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7ஆம் ஆண்டு துவக்க சென்னையில் இன்று (21-02-24) கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடியை சென்னை அலுவலகத்தில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ஏற்றினார்.
அதன்பின், கமல்ஹாசன் தனது கட்சித் தொண்டர்களிடம் பேசினார். அப்போது அவர், “இந்தியாவிலேயே 40 சதவீதம் பேர் ஓட்டு போடாமல் இருக்கின்றனர். அவர்கள் எல்லாம் ஓட்டு போட்டால் எல்லாம் சரியாகிவிடும். என்னை எல்லோரும் முழு நேர அரசியல்வாதியா? என்று கேள்வி கேட்கிறார்கள். ஆனால், ஓட்டு போடாமல் இருப்பவர்கள் முழு நேர குடிமகனாக கூட இருக்கவில்லை. எனவே, அனைவரும் வாக்களிக்க வேண்டும். முழு நேர அரசியல்வாதி என யாரும் இல்லை. என் சொந்த காசை வைத்து கட்சி நடத்துகிறேன். என்னுடைய அரசியல் பயணம் என்பது ஆரம்பித்துவிட்டது. தொடர்ந்து அழுத்தமாக நடைபோட்டுக்கொண்டே இருப்பேன். அரசியலை விட்டு என்னைப் போக வைக்க முடியாது.
நாட்டு மக்களிடம் குடியுரிமை ஆட்டம் கண்டுள்ளது. விவசாயிகளை தடுக்க ஆணி படுக்கையை சாலையில் போட்டுள்ளது ஒன்றிய அரசு. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக வேளாண் பட்ஜெட்டின் விவசாயிகளுக்கு தமிழ்நாடு செய்துள்ள நன்மையில் 10% கூட ஒன்றிய அரசு செய்யவில்லை. தெற்கு தேய்ந்தால் கூட பரவாயில்லை என்று நினைப்பவர்கள் தான் ஒன்றியத்தில் ஆட்சியில் உள்ளார்கள். மாநிலங்களுக்கு சரியான வரிப்பகிர்வு அவசியம்” என்று பேசினார்
அதனை தொடர்ந்து, அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “கூட்டணி குறித்து நான் மட்டும் தனியாக சொல்ல முடியாது. மற்ற கட்சிகளுடன் கலந்து ஆலோசித்துவிட்டு தான் கூற முடியும். கூட்டணி இறுதியானவுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். கட்சி அரசியலை தாண்டி நாட்டு நலன் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது. அரசியலுக்கு வந்துள்ள விஜய்யுடன் ஏற்கெனவே பேசியிருக்கிறேன். அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று கூறிய முதல் வரவேற்பு குரல் என்னுடைய குரல் தான்” என்று கூறினார்.