Skip to main content

8 மாவட்டங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை!

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
NIA in 8 districts Action test

கோவை மாவட்டம் உக்கடம் கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி அதிகாலை சாலையில் சென்று கொண்டிருந்த கார் வெடித்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கார் வெடித்த இடத்திலிருந்து ஆணிகள், பால்ரஸ் குண்டுகள் உள்ளிட்ட பல வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. பின்னர் இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபர் உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜமேசா முபீன் என்பதும் அவரது வீட்டில் 75 கிலோ வெடி பொருட்களைப் பதுக்கி வைத்து இருந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் உபா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர் மேலும் இவ்வழக்கு விசாரணை தேசியப் புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதே சமயம் இந்த வழக்கில் தொடர்புடைய முகமது தால்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர் கான் மற்றும் இத்ரீஸ் உள்ளிட்ட 15 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சென்னை, கோவை, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சுமார் 25 இடங்களில் இந்த சோதனை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கார் குண்டு வெடிப்பு சம்பந்தமாக மூளைச் சலவை செய்தல், நிதி வசூல் செய்தல், உபகரணங்கள் வாங்கிக் கொடுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டு தொடர்பாக இந்த சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. அதன்படி கோவையில் உக்கடத்தில் உள்ள அபிபுல் ரகுமான் என்பவர் வீட்டிலும், திருநெல்வேலி ஏர்வாடியில் உள்ள பக்ரூதின் அலி என்பவர் வீட்டிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திடீரென என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளதால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   

சார்ந்த செய்திகள்

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அர்ச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 27/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.