நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (04-06-24) எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. அதில், மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க வெறும் 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியதால், தனிப்பெரும்பான்மை என்ற அந்தஸ்தை பா.ஜ.க இழந்துவிட்டது. இதனால், மத்தியில் பா.ஜ.க கூட்டணி ஆட்சி அமைவதற்கான சூழல் தான் நிலவுகிறது.
தேர்தல் முடிவு வெளிவரும் வரை, சுமார் 400 இடங்களை கைப்பற்றுவோம் என்று பா.ஜ.க கூறி வந்த நிலையில், ஆட்சி அமைக்க தனிப்பெரும்பான்மை இல்லாததால் பா.ஜ.கவுக்கு இது பெரிய அடி என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகிறார்கள். அதே போல், பா.ஜ.க கூட்டணி 350 இடங்களை கைப்பற்றும் என்று முக்கிய செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்பும் பொய்த்துப் போனதாகவும் கூறுகிறார்கள்.
இந்த நிலையில், கர்நாடகா முதல்வர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “பா.ஜ.க கடந்த 2014ல் 282 இடங்களிலும், 2019ல் 303 இடங்களிலும் வெற்றி பெற்றது. ஆனால் இந்த மக்களவைத் தேர்தலில் வெறும் 240 இடங்களை மட்டுமே பா.ஜ.க கைப்பற்றியுள்ளது. பாஜக தனிப்பெரும் கட்சியாக இருக்கலாம். ஆனால், அதற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. எங்கும் மோடி அலை இல்லை. அதாவது அவரது புகழ் குறைந்துள்ளது என்பது தெளிவாகிறது.
தேர்தல் பிரசாரத்தின் முடிவில் தான் தோற்றுவிட்டதை உணர்ந்த மோடி, ஜாதி, மதத்தின் பெயரால் வாக்கு கேட்டும், முஸ்லிம்களை நேரடியாக குறிவைக்கவும் ஆரம்பித்தார். நரேந்திர மோடிக்கு இந்த நாட்டின் பிரதமராகும் தார்மீக உரிமை இல்லை. என்னைப் பொறுத்தவரை பா.ஜ.க பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. ராகுல் காந்தியின் தலைமைக்கு மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது. அவரது பாரத் ஜோடோ யாத்ரா மற்றும் நியாய யாத்திரைக்கு மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது. காங்கிரஸின் வாக்கு சதவீதமும் அதிகரித்துள்ளது” என்று கூறினார்.