நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்துள்ள கொடநாடு பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றிருந்தது. இதில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. ஓட்டுநர் கனகராஜ் வாகன விபத்தில் உயிரிழந்த நிலையில் தொடர்ந்து சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கொடநாடு பங்களாவில் ஆய்வு செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இன்றைய தினம் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை உதகையில் இருக்கக்கூடிய மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீசாரும், அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாளையார் மனோஜ், சயான் ஆகிய இருவர் மட்டுமே ஆஜராகினர்.
கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்ற கொடநாடு பங்களாவில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாலும், அதை நீதிபதி நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என எதிர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் என்பவர் கடந்த வழக்கு விசாரணையில் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சிபிசிஐடி தரப்பில் ஏற்கெனவே கொடநாடு பங்களாவை ஆய்வு செய்ய பொதுப்பணித்துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகள் அடங்கிய நிபுணர் குழு அமைத்திருப்பதாகவும், அந்த குழு பங்களாவை ஆய்வு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்தனர்.
அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி சம்பந்தப்பட்ட பங்களாவில் ஆய்வு செய்ய அனுமதிப்பதாகவும், ஆய்வின் போது ஆய்வுக் குழுவினர் ஆய்வு செய்வதை முழுமையாக வீடியோ பதிவு செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அங்கு இருக்கக் கூடிய தடயங்களை அழிக்கவோ அல்லது மாற்றவோ கூடாது என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை மார்ச் எட்டாம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.