அண்மையாக சில மாதங்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி இருந்தது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சொத்துக் குவிப்பு புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த சில மாதங்களாக தொடர் சோதனையில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி. வீரமணி ஆகியோரது இல்லங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சார்பில் சோதனை நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
நேற்று முன்தினம் அதிமுக கடலூர் மாவட்டம் பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் என்பவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியிருந்தனர். இந்த சோதனையில், குற்றத்தில் தொடர்புடைய ஆவணங்கள், நிலம் மற்றும் 47 சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றின் சொத்து மதிப்பு ரூ.15 கோடியே 64 லட்சத்து 32 ஆயிரத்து 237 என தெரியவந்தது.
இந்நிலையில், இன்று காலை முதல் அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏவான பிரபு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி எம்எல்ஏவாக இருந்த பிரபு மற்றும் அவரது தந்தை ஐயப்பா ஆகியோருக்கு தொடர்புடைய ஏழு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.தியாகதுருகத்தில் உள்ள பிரபு வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக விழுப்புரத்தில் உள்ள பிரபுவின் சகோதரி வசந்தி வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரியவந்துள்ளது. பிற்பகலுக்கு பின்னர் சோதனையின் முடிவு வெளிவரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த லஞ்ச ஒழிப்பு துறையின் சோதனைக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'கள்ளக்குறிச்சி தொகுதி கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரபு மீது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பழிவாங்கும் எண்ணத்தோடு லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவிவிட்டு சோதனை மேற்கொண்டிருக்கும் திமுக அரசின் இச்செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி தொகுதி கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு பிரபு அவர்கள் மீது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பழிவாங்கும் எண்ணத்தோடு லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவிவிட்டு சோதனை மேற்கொண்டிருக்கும் விடியா திமுக அரசின் இச்செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்…
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) March 1, 2024