போலீசார் அடித்து துன்புறுத்தியதால், சாத்தான்குளம் பகுதியினை சேர்ந்த தந்தை மகன் இருவரும் உயிரிழந்ததாக காவல்துறைக்கு எதிராக தமிழகமெங்கும் கன்டனங்கள் பதிவாகியது. இந்த விவகாரத்தில் எஸ்.ஐ-க்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் குறிப்பிட்ட எஸ்.ஐ-களுக்கு எதிராக மேலும் பல புகார்கள் வெளிவரத்துவங்கியுள்ளது. அந்த வகையில், " என்னையும் அடித்துக் காயப்படுத்தியது அந்த எஸ்.ஐ-க்களே.! எனக்கு சிகிச்சைக் கொடுங்கள்" என சிறைச்சாலையிலிருந்து மருத்துவமனைக்கு மாறியுள்ளார் கொலை வழக்கின் விசாரணை கைதி ஒருவர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலைய எல்கைக்குட்பட்டது தெற்கு பேய்க்குளம் கிராமம். இந்த ஊரில் பெட்டிக்கடை நடத்தியும், ஆட்டோ டிரைவராகவும் வசித்து வந்த ஜெயக்குமார் ஸ்ரீவெங்கடேசுவரபுரம் பஞ்சாயத்து 6-வது வார்டு கவுன்சிலர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருக்கும் பனைகுளம் பகுதியினை சேர்ந்த ராஜ மிக்கேலுக்கும் முன்பகை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த மே மாதம் 18-ந்தேதி இரவில் தான் நடத்தி வந்த பெட்டிக்கடை முன்பாகவே ராஜ்மிக்கேல் குழுவினரால் படுகொலை செய்யப்பட்டார் ஜெயக்குமார். இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டதாக ராஜமிக்கேலின் கூட்டாளிகளான அழகு ஜார்ஜ், முத்துகிருஷ்ணன், சங்கரவேல், நவீன், தசரதன், மகராஜன், கணேசன்), மத்தியாஸ், ராஜாசிங் மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்டோரை சாத்தான்குளம் போலீசார் தேடி வந்தனர். இதில் சரணடைய வந்த மேல பனைகுளத்தைச் ராஜாசிங்கை எஸ்.ஐ-க்கள் பாலகிருஷ்ணன் மற்றும் ரகுகணேஷ் ஆகியோர் காவல் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கியதாக கூறப்படுகின்றது. அதன் பின்னர் ஜெயக்குமார் கொலை வழக்கில் ரிமாண்ட் செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச்சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார் ராஜாசிங். இந்நிலையில், சாத்தான்குளம் பகுதியினை சேர்ந்த தந்தை மகன் இதே எஸ்.ஐ-க்களால் தாக்கப்பட்டு ஆசனவாயில் காயம் ஏற்பட்டு உயிரிழந்தந்து தெரியவர, "அந்த எஸ்.ஐ-க்கள் தான் தன்னை அடித்துக் காயப்படுத்தியது. தனக்கும் ஆசன வாயில் காயம் இருக்கின்றது. எனக்கு மருத்துவ சிகிச்சை வேண்டுமென" என கோவில்பட்டி கிளைச்சிறை சப் ஜெயிலரிடம் கோரிக்கை வைத்திருக்கின்றார்.
விசாரணைக்கைதியின் கோரிக்கையை ஏற்ற சிறைத்துறை ராஜாசிங்கை சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பலத்தக் காவலுடன் அனுப்பி வைத்தனர். மீடியாவிடம் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக கரோனா தொற்று வார்டுக்கு அருகிலேயே வைத்து சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இதே வேளையில், சாத்தான்குளம் குற்ற வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக கோவில்பட்டி கிளைச் சிறையில் பாளையங்கோட்டை மத்திய சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.