ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் 'ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு' எனப் பதிவிட்டுள்ளது பற்றி அரசியல் விமர்சகர் பொங்கலூர் மணிகண்டன் நக்கீரன் இணையதளத்திடம் கருத்தினை பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவர், இரண்டு ஆட்சிகளையும் பார்த்த பொதுமக்களுக்கு ரஜினியின் இந்த அறிவிப்பு உற்சாகமாக இருக்கிறது. இதனை அறிவிக்கும்போது ரஜினிக்கே ஒரு மிகப்பெரிய சந்தோஷம் தெரிகிறது. பா.ம.க போராட்டம், புயல் அறிவிப்புகள், டெல்லி போராட்டம் எல்லாமே காணாமல் போய்விட்டது.
திமுகவில் வாரிசு அரசியல், அதிமுக அரசில் நடக்கக் கூடிய தவறுகள், இந்த இரண்டையுமே தடுக்கவும், கேள்வி கேட்கவும் புதிதாக ஒருவர் வந்துவிட்டார் என்ற மகிழ்ச்சியும் தமிழக மக்களுக்கு வருகிறது. எந்தக் கட்சியிலும் இல்லாத பொதுவாக்குகள் வரும் சட்டமன்றத் தேர்தலில், யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்பதை தீர்மானிக்கப் போகிறது. அந்த வாக்குகள் நிச்சயமாக ரஜினிக்கு வரும். அதுவே மிகப்பெரிய பலம். மேலும் இன்னொன்று அவர் செய்ய வேண்டும். யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை தெரிவிக்க வேண்டும். அப்படித் தெரிவித்தால் கூடுதல் பலமாக இருக்கும். ஏனென்றால் மு.க.அழகிரி வரவேற்றுள்ளார். இதேபோல் பலரும் வரவேற்றுள்ளனர்.
நீங்கள் சொன்னதுபோலவே பா.ம.க போராட்டம், புயல் அறிவிப்புகள், டெல்லி விவசாயிகள் போராட்டம் எல்லாமே ரஜினி அறிவிப்புக்குப் பின்னர் காணாமல் போய்விட்டது. மத்திய அரசுக்கு எதிரான விஷயங்களை திசை திருப்பவே, 'ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு' என ரஜினி திடீரென்று இதுபோன்று அறிவிக்கிறார் என்ற விமர்சனங்களும் எழுகிறதே?
அது உண்மை இல்லை. இந்த அறிவிப்பு நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்த பின்னர்தான் முழு மனதுடன் ரஜினி அறிவிக்கிறார். ரஜினி தொடங்கும் கட்சிக்கு பாஜகவின் சாயல் இருந்தால், தமிழக மக்கள் வெறுப்பார்கள். பாஜகவின் சாயல் நூறு சதவிகிதம் இல்லாமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அவர் எடுக்கும் முயற்சிக்குப் பலன் கிடைக்கும்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் கமல் - ரஜினி கூட்டணிக்கு வாய்ப்புள்ளதா?
கூட்டணி வைத்தால் நல்லது. கண்டிப்பாக அதற்கான வாய்ப்பு உள்ளது. ரஜினியின் இந்த அறிவிப்பு, தி.மு.க தலைமைக்கும், அ.தி.மு.க தலைமைக்கும் சங்கடத்தை உருவாக்கியுள்ளது. இரண்டு கட்சிகளின் தலைமைகளும் கூட்டணிக் கட்சிகளை மிரட்டி வைக்கலாம் என நினைத்தார்கள். ஆனால், இப்போது ரஜினி அறிவிப்புக்குப் பிறகு கூட்டணியில் உள்ள கட்சிகள், கூடுதல் இடங்கள் கேட்கும் வாய்ப்பு உள்ளது. அப்படியில்லையென்றால் கூட்டணியில் இருந்து வெளியே வந்து ரஜினியை ஆதரிக்க வாய்ப்பு உள்ளது. திமுகவோ, அதிமுகவோ தனித்து ஆட்சி அமைக்க நூறு சதவிகிதம் வாய்ப்பு இல்லை.