எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் 3வது நீதிபதியே இறுதி முடிவு எடுப்பார் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்த தினகரன் அணியைச் சேர்ந்த 18 எம்எல்ஏ-க்களை சபாநாயகர் தனபால் தகுதிநீக்கம் செய்ததை எதிர்த்து அனைவரும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில் தகுதி நீக்கம் செல்லும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், செல்லாது என நீதிபதி சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். அதனால் வழக்கை மூன்றாவது நீதிபதியாக விமலா விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என தங்கதமிழ்ச் செல்வன் தவிர்த்து எஞ்சிய 17 பேரும் உச்சநீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர். உயர்நீதிமன்றம் விசாரித்தால் மேலும் தாமதமாகும் என்பதால் அங்கிருந்து வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ்.கே.கவுல் அடங்கிய அமர்வில் இன்று காலை விசாரணைக்கு வந்தது. அதில், மூன்றாவது நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விமலாவுக்கு பதிலாக, சத்தியநாராயணனை நியமனம் செய்து உத்தரவிட்டனர்.
எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் 3வது நீதிபதியே இறுதி முடிவு எடுப்பார் என்றும் வழக்கை விரைவில் விசாரித்து முடிக்கவும் உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. மேலும் தகுதி நீக்க வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்க கோரிய டிடிவி தினகரன் ஆதரவாளர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.