ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் 1,000வது நாட்களை கடந்து நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயன்றும், போர் நின்றபாடில்லை. அதே வேளையில், இந்த போரில் உக்ரனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரம் மற்றும் ராணுவ உதவிகளை வழங்கி வருகின்றன. இதற்கிடையே, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரஷ்யா பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், ரஷ்யா- உக்ரைன் போரில் 12 இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது, “இன்றைய நிலவரப்படி, ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் இந்திய நாட்டினர் மீது 126 வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த 126 வழக்குகளில், 96 பேர் இந்தியா திரும்பியுள்ளனர் மற்றும் ரஷ்ய ஆயுதப் படைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். ரஷ்ய ராணுவத்தில் 18 இந்தியர்கள் உள்ளனர், அவர்களில் 16 பேர் எங்கிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
ரஷ்ய தரப்பு அவர்களைக் காணவில்லை என வகைப்படுத்தியுள்ளது. மீதமுள்ளவர்களை முன்கூட்டியே விடுவித்து தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்ப நாங்கள் முயல்கிறோம். ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 12 இந்தியர்கள் இறந்துவிட்டனர். கேரளாவைச் சேர்ந்த ஒரு இந்திய நாட்டவரின் துரதிர்ஷ்டவசமான மரணம் குறித்து நாங்கள் அறிந்தோம். அவர் ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றுவதற்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதாகத் தெரிகிறது” என்று கூறினார்.