
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த செங்குணம் ஊராட்சிக்குட்பட்ட கொல்லமேடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வரும் ஜோதிஸ்வரன் என்ற மாணவனை சமையலர் லட்சுமி தாக்கு வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஏப்ரல் 2 ஆம் தேதி மதிய உணவின் போது மாணவர்களுக்கு முட்டை வழங்கும் பொழுது சில மாணவர்களுக்கு சமையலர் லட்சுமி மற்றும் உதவியாளர் முனியம்மாள் இருவரும் முட்டை வழங்காமல் இருந்துள்ளனர். அப்போது சில மாணவர்கள் தங்களுக்கு முட்டை வேண்டும் என்று கூறியுள்ளனர். அதற்கு சமையலாளர் இருவரும் முட்டை காலி ஆகிவிட்டது என்று கூறியுள்ளனர்.
உடனே மாணவன் ஜோதிஸ்வரன், “உள்ளே எடுத்து வைத்துள்ள முட்டையை கொடுங்கள்..” என்று கூறியிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த சமையலர் லட்சுமி உள்ளே வைத்திருந்த மூன்று அவித்த முட்டைகளை எடுத்து கொடுத்துள்ளனர். அதேசமயம், ஒரு சிறுவன் நம்மை கேள்வி கேட்டுவிட்டானே என்று ஆத்திரமடைந்த சமையாலாளர் சமையலர் தனது உதவியாளர் முனியம்மாவை அழைத்துக் கொண்டு வகுப்பறையில் இருந்த மாணவனை குப்பைக் கூட்டுவதற்காக வைத்திருந்த துடைப்பத்தை எடுத்து வந்து சரமாரியாக அடித்துள்ளார்.

இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, சம்பந்தப்பட்ட சிறுவன் எங்களது உறவுக்கார பையன். அதனால் நான் அடித்துவிட்டேன் என்று சாதரணமாக கூறியிருக்கிறார். அதற்காக ஒரு மாணவனை நீங்கள் எப்படி அடிக்கலாம் என்று அதிகாரிகள் இருவரையும் கடிந்துகொண்ட அதிகாரிகள் மாணவனை தாக்கிய சமையலர் லட்சுமி மற்றும் அவரது உதவியாளர் முனியம்மாள் இருவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர். அத்துடன் பள்ளி ஆசிரியர் மற்றும் சத்துணவு அமைப்பாளர் ஆகிய இருவரையும் பணிமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பள்ளியில் தலைமையாசிரியர் கொடுத்த புகாரின் பேரில் சமையலர் லட்சுமி மற்றும் அவரது உதவியாளர் முனியம்மாள் இருவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.