காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் கொடுத்த 6 வார காலக்கெடு இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. ஆனால் மத்திய அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க வில்லை.
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கடந்த 18 நாட்களாக நாடாளுமன்றத்தில் தமிழக எம்பி-கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தார்கள். இந்த நிலையில் கடந்த 28 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அதிமுக எம்பி நவநீத கிருஷ்ணன், “காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க பட வில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வோம்” என்று அறிவிக்கவே பரபரப்பாக பேசபட்டது. ஆனால் தற்கொலை எல்லாம் செய்ய வேண்டாம் எம்பி பதவியை ராஜினாமா செய்தால் மட்டுமே போதும் என்று பல தரப்பிலிருந்து பேச்சுகள் வந்தன.
இந்த நிலையில் இன்று எம்பி குமார், அருண் மொழிதேவன், ஹரி ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசி இருக்கிறார்கள். இந்த பேச்சு வார்தையின் போது ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். ஆனால் டெல்டா பகுதியை சேர்ந்த எம்பி-களை மட்டும் ராஜினாமா செய்யச் சொல்லும் முடிவில் முதல்வர் இருப்பதாக சொல்கிறார்கள். அப்படி செய்தால் எம்பி-களுக்குள் பிரச்சனை ஏற்படும் என்று சொல்லவே இறுதி முடிவு எடுக்கப்படாமல் இருக்கிறது.
இது ஒரு புறம் இருக்க அதிமுக எம்.பி-களை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யச் சொல்லும் பட்சத்தில் மத்திய அரசு ரெய்டு செய்து விடும் என்று பயம் இருப்பதாக டெல்லியில் இருக்க கூடிய எம்.பி.கள் சொல்கிறார்கள். அதிமுக தலைமையின் உத்தரவுக்காக டெல்லியில் எம்பிக்கள் காத்துகிடக்கிறார்கள். டிடிவி ஆதரவு எம்பி கோவை நாகராஜன், சசிகலா அனுமதித்தால் திங்கள் அன்று ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.