நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. ஒரு தொகுதியில் போட்டியிட இருக்கிறது. சொந்த சின்னத்தில் மட்டுமே ம.தி.மு.க. போட்டியிடும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பம்பரம் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் (25.03.2024) அவசர வழக்காக தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நேற்று (26.03.2024) இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வைகோ தரப்பில் மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் ஆஜராகி, “தங்களுடைய கோரிக்கையை ஏற்று கட்சி நிர்வாகிகளின் பெயர்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்யவில்லை. நாளை (இன்றைய தினம்) வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் தாங்கள் கோரிக்கையை உடனடியாக பரிசீலிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட விட வேண்டும்” என வாதிட்டார். இதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர், “சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும். ம.தி.மு.க. கோரிக்கை மீது இன்று (நேற்று) முடிவு எடுக்கப்படும். 14 ஆண்டுகளுக்கு முன்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட பிறகு ம.தி.மு.க.விற்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது குறித்து சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் அதிகாரி தான் முடிவு எடுப்பார்” என வாதிட்டார்.
அதனைத் தொடர்ந்து பம்பரம் சின்னம் தற்போது பொது சின்ன பட்டியலில் உள்ளதா இல்லையா என்பது குறித்து பிற்பகல் 02.15 மணிக்கு தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை 2.15 மணிக்கு ஒத்திவைத்திருந்தனர். அதன்படி இந்த வழக்கு மீண்டும் நேற்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன், “பம்பரம் சின்னம் பொதுச்சின்னம் பட்டியலிலும் இல்லை, அங்கீகரிக்கப்பட்ட சின்னம் பட்டியலிலும் இல்லை என்பதால் ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் வழங்குவது குறித்து நாளை (27.03.2024) காலை 09.30 மணிக்குள் மணிக்குள் தேர்தல் அலுவலர் முடிவெடுப்பார்” என தேர்தல் ஆணையம் சார்பில் பதிலளிக்கப்பட்டது.
இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்குவது குறித்து நாளை காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டும். நாளை பிற்பகல் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் போது ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் குறித்து தெரிவிக்க வேண்டும்” என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தனர். இதனையடுத்து பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது எனத் தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் மூலம் ம.தி.மு.க. வழக்கறிஞர்களுக்குப் பதில் அளித்தது. அதே சமயம் ம.தி.மு.க. சார்பில் பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று (27.03.2024) மீண்டும் பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் வாதிடுகையில், “பொதுச்சின்னங்கள் பட்டியலில் இல்லாத பம்பரம் சின்னத்தை மதிமுகவுக்கு வழங்க சட்டவிதிகள் இல்லை. ஒரே மாநிலத்திற்குள் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதியில் போட்டியிட்டால் மட்டுமே பம்பரம் சின்னம் ஒதுக்க முடியும்” எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் வைகோ தரப்பில் வாதிடுகையில், “வேறு மாநிலத்தில் மேலும் ஒரு தொகுதியில் போட்டியிட உள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “வேட்புமனு தாக்கலின் கடைசி நாளில் இந்த வழக்கிற்கு தீர்வு காண இயலாது. கடந்த 2010ஆம் ஆண்டு ம.தி.மு.க. அங்கீகாரத்தை இழந்துவிட்டது. தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தின் படி ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னத்தை வழங்க முடியாது. எனவே ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது’ எனத் தெரிவித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.