மத்திய அரசுக்கு எதிராக கடந்தமூன்று நாட்களாக நடத்தி வந்த தர்ணா போராட்டத்தை நிறைவு செய்தார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக, கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரிப்பதற்காக நேற்று முன்தினம் 8 சி.பி.ஐ. அதிகாரிகள் திடீரென அவரது வீட்டுக்கு சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கொல்கத்தா போலீசார், சி.பி.ஐ. அதிகாரிகளை வலுக்கட்டாயமாக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று காவலில் வைத்து, பின்னர் விடுவித்தனர். இதைத் தொடர்ந்து மத்திய அரசுக்கும், மம்தா பானர்ஜி அரசுக்கும் மோதல் உருவாகியது.
சிபிஐயின் நடவடிக்கை அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்தார். அதோடு அரசியலமைப்பு சட்டத்தையும், கூட்டாட்சி தத்துவத்தையும் பாதுகாக்கப் போவதாக சொல்லி கொல்கத்தா எஸ்பிளனேடு பகுதியில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையம் எதிரில் நேற்று முன்தினம் போராட்டத்தை தொடங்கினார். தி.மு.க. சார்பில் கனிமொழி, ஆம் ஆத்மி சார்பில் கெஜ்ரிவால், ராஷ்டீரிய ஜனதா தளம் சார்பில் தேஜஸ்வி உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் மம்தாவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர மாநில முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு இன்று சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து, இன்று மாலை 6. 20 மணிக்கு மேல் போராட்டத்தை கைவிட்டார் மம்தா. ’’உச்சநீதிமன்றம் எங்களுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளதால் இந்த தர்ணா போராட்டத்தை கைவிடுகிறேன். இந்த போராட்டம் ஜனநாயகத்திற்கும், அரசியலைமைப்பிற்கும் கிடைத்த வெற்றி’’என்று தெரிவித்தார்.