‘நிலுவையில் உள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், வரலாறு நம்மை ஒருபோதும் மன்னிக்காது’ என உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தெரிவித்துள்ளார்.
உத்தர்காண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் மற்றும் மூத்த வழக்கறிஞர் இந்து மல்கோத்ரா ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கக் கோரி, உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் மத்திய அரசுக்கு கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி பரிந்துரை அளித்தது. இந்தப் பரிந்துரை வழங்கி மூன்று மாதங்கள் ஆகியும் இதுவரை அதன்மீது மத்திய அரசு எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில், நீதிபதிகள் நியமனத்தை உடனடியாக மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தை உணர்த்தும் விதமாக நீதிபதி ஜோசப் குரியன் தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா உள்ளிட்ட 22 நீதிபதிகளுக்கு கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார். இந்தக் கடிதத்தில், ‘உச்சநீதிமன்ற நீதிபதிகளின் மூலம் பரிந்துரைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, மூன்று மாதங்களாக எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருப்பது இதுவே முதல்முறையாகும். சுகப்பிரசவம் ஆவதற்கான வழிகள் இல்லையென்றால், தகுந்த காலத்திற்குள் அறுவைச் சிகிச்சை மூலமாக குழந்தையை வெளியே எடுப்பதற்கான வேலைகளைச் செய்யவேண்டும். இல்லையென்றால், பிறக்கவேண்டிய குழந்தை கருப்பையிலேயே செத்துப்போகும்’ என எழுதியிருந்தார்.
மேலும், இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்குப் பேசிய நீதிபதி குரியன் ஜோசப், ‘இது மிகவும் மோசமான கட்டத்தை எட்டியிருக்கிறது. நாம் இதனால் பாதிப்பைச் சந்திக்கிறோம். உச்சநீதிமன்றத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி யாரும் கவலை கொள்வதாகத் தெரியவில்லை’ என உருக்கமாக பேசியுள்ளார்.