சசிகலா தனது ஆதரவாளர்களிடம் பேசும் ஆடியோக்கள் வெளியாகி, அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேட்டி அளித்த அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கே.பி.முனுசாமி, அதிமுக கட்சியில் சசிகலா இல்லை. அவருக்கும் கட்சிக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் கருத்துக்களைச் சொல்லி வருகிறார். அதிமுக என்கிற பேரியக்கத்தை ஒன்னரை கோடி தொண்டர்கள் பாதுகாத்து வருகிறார்கள்.
இதனால், அதிமுக தொண்டர்கள் யாரும் சசிகலாவின் கருத்துக்கு செவி சாய்க்க மாட்டார்கள். அதிமுக தொண்டர்கள் யாரும் அவருடன் பேசவில்லை. சசிகலா தான் ஃபோன் போட்டுப் பேசுகிறார். குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி இது. அவருடன் இருக்கும் சிலர் அவரை தூண்டிவிடுகின்றனர். அம்மாவின் (ஜெயலலிதா) ஆன்மா சாந்தியடைய வேண்டுமானால் சசிகலா அமைதியாக இருக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து நக்கீரனிடம் கருத்து தெரிவித்த நாஞ்சில் சம்பத், "ஜெயலலிதா ஆன்மா சாந்தியடைய வேண்டுமானால் முனுசாமி அரசியலில் இருந்து விலக வேண்டும். ஏனென்றால் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது இந்த முனுசாமியைத் தூக்கி வெளியே வீசினார். ஆறு இலாகாக்களை வைந்திருந்த மந்திரி. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இலாகாவிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என்று அறிக்கை வருகிறது. ஏழாவது நாள் அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். எட்டாவது நாள் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். ஜெயலலிதா ஆன்மா இவர் பக்கமா இருக்கிறது. இவர் அரசியலிலேயே இருக்கக் கூடாது. சசிகலாவைப் பற்றிச் சொல்வதற்கு முன்பு முனுசாமி தனது கடந்த காலத்தை யோசிக்க வேண்டும்" என்றார்.