தமிழக மக்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள், விவசாய சங்கங்கள் கடந்த 4 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர், அமைச்சர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தமிழக அரசு வழக்கறிஞர் உமாபதி, வழக்கு ஒன்று தொடர்பாக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்பு ஆஜரானார். அப்போது தலைமை நீதிபதி தமிழக மக்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கூறினார்.
தலைமை நீதிபதி கூறுகையில், தமிழகத்தின் என்னதான் நடக்கிறது. ஏன் அனைத்து இடங்களிலும் போராட்டம் நடக்கிறது. மக்களும் தமிழக கட்சிகளும் போராட்டத்தை கைவிட வேண்டும். தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பவும், அமைதியை நிலைநாட்ட வேண்டும். வரும் 9-ம் தேதி காவிரி தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரும். அன்றைய தினம் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும். தமிழகத்திற்கு தேவையான தண்ணீர் பெற்று தரப்படும் என தெரிவித்தார்.