தலைநகர் டெல்லியை நோக்கி, 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் பேரணியாகச் செல்கின்றனர். விவசாயிகளுக்கும் ஹரியானா மாநில காவல்துறையினருக்கும் இடையே பஞ்சாப், ஹரியானா எல்லைப் பகுதிகளில் கடும் மோதல் நீடித்துவருகிறது.பஞ்சாப் ஹரியானா எல்லையான ஷாம்பு எல்லைப் பகுதியில், ஏற்கனவே விவசாயிகள் மீது தொடர்ந்து காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி வருகின்றனர்.
காவல்துறையினரால் வீசப்பட்ட கண்ணீர் புகைக் குண்டு வெடித்து, பஞ்சாப் மாநிலம் பதிண்டாவைச் சேர்ந்த சுப்கரன் சிங் (வயது 24) என்னும் இளம் விவசாயி கடந்த 21ஆம் தேதி உயிரிழந்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.இராதாகிருஷ்ணன் இன்று (23-02-24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “பஞ்சாப்பில் இருந்து விவசாயிகளின் போராட்டம் அடிக்கடி நடக்கிறது. ஏன் என்று எங்களுக்குப் புரியவில்லை. குறைந்தபட்ச விலையை எப்படி சட்டப்படி உறுதி செய்வது என்று தெரியவில்லை. அவர்களின் கோரிக்கை எந்தளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை. நீங்கள் அதிக எண்ணிக்கையில் வந்து போக்குவரத்தைத் தடுக்குறீர்கள். பிறகு, அரசு சில நடவடிக்கை எடுக்கத் தான் வேண்டும்” என்று கூறினார்.