பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்டதாக கைது செய்யப்பட்ட மாணவி சோபியா ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், நேற்று காலை சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றிருந்த போது அதே விமானத்தில் வந்த இளம்பெண் ஒருவர், பாஜக ஒழிக.. பாஜகவின் பாசிச ஆட்சி ஒழிக என்று விமானத்துக்குள்ளேயும், தூத்துக்குடி விமான நிலையத்திலும் முழக்கமிட்டுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த தமிழிசை அந்த பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், விமான நிலைய போலீசார் தமிழிசையை சமாதானப்படுத்தினர். பின்னர் தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியனிடம் அந்த இளம்பெண் குறித்து தமிழிசை புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த பெண்ணை புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், அவர் தூத்துக்குடியைச் சேர்ந்த மருத்துவரின் மகள் சோபியா என்பதும், கனடாவில் பயின்று வரும் அவர் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் பயணித்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, மாணவி சோபியா மீது புதுக்கோட்டை காவல்நிலைய போலீசார் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் (ஐ.பி.சி.290), பொது இடத்தில் அரசு, அரசு சார்ந்த உயர் அதிகாரிகளுக்கு எதிராக மக்களை கிளர்ந்து எழச்செய்யும் வகையில் பேசுதல் (ஐ.பி.சி.505(1)(பி), போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தல் (75(1)(சி) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து, சோபியா தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, பாஜகவுக்கு எதிராக தமிழிசை முன் முழக்கமிட்ட குற்றச்சாட்டில் சோபியாவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவை அடுத்து, சோபியா நெல்லை கொக்கிரகுளம் மகளிர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனிடையே, மாணவி சோபியா தனக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்ததால் அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், தூத்துக்குடி நீதிமன்றத்தில் சோபியா ஜாமீன் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி தமிழ்செல்வி சோபியாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி சோபியா விடுவிக்கப்பட்டுள்ளார்.