சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக விஜயா கமலேஷ் தஹில் ரமாணி இன்று பதவியேற்றார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அவரது பதவியேற்பு விழா நடைபெற்றது. தஹில் ரமாணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும், உச்சநீதிமன்ற நீதிபதியுமான இந்திரா பானர்ஜி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியான தஹில் ரமாணி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
1958ஆம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி தஹில் ரமாணி பிறந்தார். 1982ஆம் ஆண்டு ஜூலையில் மும்பை மற்றும் கோவா பார் கவுன்சிலில் பதிவு செய்துகொண்டார். கீழ் நீதிமன்றங்களிலும் பின்னர் உயர் நீதிமன்றத்திலும் வழக்கறிஞராக பணியாற்றினார். தந்தையுடன் சேர்ந்து வழக்கறிஞர் தொழில் செய்த தஹில்ரமாணி, பல கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளில் ஆஜராகியுள்ளார். பின்னர் அவர் மகாராஷ்டிரா மாநில அரசு தரப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு பணியாற்றினார். 1987ம் ஆண்டு முதல் 1993ம் ஆண்டுவரை பகுதி நேர பேராசிரியராக சட்டக் கல்லூரி ஒன்றில் பணியாற்றியுள்ளார்.
1990ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கூடுதல் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். பம்பாய் உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக 1997ம் ஆண்டு நவம்பர் மாதம் நியமிக்கப்பட்ட அவர், பல வழக்குகளில் வெற்றி தேடித்தந்தார். 2001ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட தஹில்ரமாணி, பின்னர் அந்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக உயர்ந்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதியாகவும், 3வது பெண் தலைமை நீதிபதியாகவும் தஹில் ரமாணி பதிவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.