சேலம் மாவட்டத்தில் இன்று (ஜூலை 22, 2018) காலை நில நடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ள நிலையில், நீண்ட காலத்திற்குப் பிறகு மேட்டூர் அணையில் நீர் நிரம்பியதுதான் நில அதிர்வுக்குக் காரணம் என்ற தகவலால் மேலும் அச்சம் அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் இன்று காலை 7.45 மணியில் இருந்து 7.50 மணிக்குள் பரவலாக லேசான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேட்டூர், ஓமலூர், தாரமங்கலம், தீவட்டிப்பட்டி, சித்தனூர் என மாவட்டத்தின் பல்வேறு கிராமப்புறங்கள் மட்டுமின்றி, மாநகர பகுதிகளில் அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் நில அதிர்வை மக்கள் உணர்ந்துள்ளனர்.
வீடுகளில் திடீரென்று பாத்திரங்கள் உருண்டு கீழே விழுந்ததால் அதிர்ச்சி அடைந்த மக்கள் பலர், பாதுகாப்பு கருதி வீதிகளுக்கு ஓடிவந்தனர். இன்று காலை பொதுமக்கள் தெருக்களில் கூடி இதைப்பற்றியே ஆச்சர்யமும் பீதியும் கலந்தவாறு பேசினர்.
சேலத்தில் நில நடுக்கம் உணரப்பட்ட சில நிமிடங்களில் தர்மபுரி மாவட்டத்திலும் பரவலாக நில அதிர்வை உணர்ந்ததாக அம்மாவட்ட மக்கள் கூறினர்.
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நில நடுக்கத்தைக் கண்டறியும் சீஸ்மோகிராப் கருவி உள்ளது. ஆனால் அந்த கருவி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பழுதடைந்து இருப்பதால், உடனடியாக நிலஅதிர்வின் அளவைப் பெற முடியவில்லை.
இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் பிற மாவட்டங்களில் உள்ள சீஸ்மோகிராப் கருவிகளின் உதவியுடன், சேலம் மாவட்டத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் அளவு 3.3 ரிக்டர்களாக பதிவாகி உள்ளதாக அறிவித்துள்ளது. காலை 7.47 மணிக்கு இந்த அளவு பதிவாகி உள்ளது. பூமிக்கு அடியில் 15 கி.மீ. ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில், மேட்டூர் அணை கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டுகிறது. மேலும், கடந்த இரு நாள்களுக்கு முன்பு வரை தொடர்ச்சியாக 10 நாள்களுக்கும் மேலாக வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கும் மேல் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நீரின் கனம் காரணமாகவும் பூமிக்கடியில் பாறைகள் நகர்ந்து இருக்கலாம் என்ற தகவலும் பரவியது.
இந்த தகவலால் அணைக்கு சேதம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சமும் மக்களிடம் பரவியுள்ளது.
இதுகுறித்து சேலம் பெரியார் பல்கலை புவியமைப்பியல் துறைத்தலைவர் பேராசிரியர் வெங்கடேஸ்வரனிடம் கேட்டோம்.
''தினமும் 10 ஆயிரம் தடவைக்கு மேல் நிலநடுக்கம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. 3 ரிக்டருக்கு மேல் நில அதிர்வு ஏற்படும்போதுதான் அதை நம்மால் உணர முடிகிறது. 5 ரிக்டருக்கு மேல் அதிர்வு இருக்குமானால் பேரிடர்களும் ஏற்படக்கூடும்.
பொதுவாக இன்றைக்கு ஏற்பட்ட நில அதிர்வை மனிதர்களால் உண்டாக்கப்படும் (மேன் மேடு) அதிர்வாக வகைப்படுத்தலாம். பல ஆண்டுகளாக மேட்டூர் அணை வறண்டோ அல்லது நீரின் அளவு குறைவாகவோ இருந்தது. இந்நிலையில், திடீரென்று அணையின் நீர்மட்டம் அதிகரிக்கும்போது நீரின் அழுத்தம் அதிகரிக்கிறது. இந்த அழுத்தம், பூமிக்கடியில் பாறைகளுக்கு இடையே உள்ள வெற்றிடத்தை நிரப்பும்போதும் இதுபோன்ற நில அதிர்வுகள் நிகழ வாய்ப்பு இருக்கிறது.
தொடர்ச்சியான சுரங்கப்பணிகள், நிலத்தடி நீருக்காக போர்வெல் போடுவது, வேகமான நகரமயமாதல் போன்ற காரணங்களாலும் நில அதிர்வுகள் ஏற்படக்கூடும். ஆனால் மேட்டூர் அணை நிரம்பியதால்தான் இன்று நில நடுக்கம் ஏற்பட்டதாக அரிதியிட்டுச் சொல்ல முடியாது. பெரும்பாலும் பருவமழை காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட் அதை விட்டால் நவம்பர் போன்ற மாதங்களில்தான் இதுபோன்ற நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது முந்தைய ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
சீஸ்மோகிராப் கருவியில் பதிவாகும் எபிசென்ட்ரிக் மற்றும் ஃபோகஸ் பாயின்ட் ஆகியவற்றை ஆய்வு செய்த பிறகுதான் என்ன காரணம் என்பதை உறுதியாக சொல்ல முடியும். ஆஸ்திரேலியாவில் நேற்று 5.5 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் தாக்கத்தால்கூட இன்று சேலம் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளன. புவி தகவமைப்புப்படி தமிழ்நாட்டிற்கு நிலநடுக்கத்தால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு,'' என்கிறார் பேராசிரியர் வெங்கடேஸ்வரன்.
இந்த கருத்தை முற்றாக மறுக்காமல் போனாலும், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சேலம் மாவட்டத் தலைவர் ஜெயமுருகன் வேறு சில காரணங்களை முன்வைத்தார்.
''ஒவ்வொரு நாளுமே ஆயிரக்கணக்கான முறைகள் நில அதிர்வுகள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன. நமது பூமி, நிலப்பகுதியில் இருந்து உள்ளே 6400 கிலோமீட்டர் உயரம் கொண்டது. இதில், வெறும் 30 கி.மீ. உயரத்திற்குதான் நிலப்பகுதி உள்ளது. அதற்குக்கீழ் 6370 கி.மீ. உயரத்திற்கு பாறைகள் உருகி குழம்பு நிலையில் சுழன்று கொண்டிருக்கிறது. அந்த பிளவுகளுக்கு இடையில் இருந்து குழம்புகள் வெளியே வருவதைத்தான் எரிமலைகள் என்கிறோம்.
பூமியானது ஓர் உயிரோட்டமான இயக்கத்தை உள்ளுக்குள்ளேயே நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக இந்திய கண்டமானது ஆசிய கண்டத்தட்டுகளை நோக்கி தொடர்ச்சியாக நகர்ந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் இதுபோன்ற நில அதிர்வுகள் ஏற்படுகின்றன.
மேட்டூர் அணையில் முழுமையாக நீர் நிரம்பியதால்தான் நில அதிர்வு ஏற்பட்டது என்பதையும் அறிவியல் உலகம் முழுமையாக புறக்கணிக்கவில்லை. ஆனால், அதுதான் காரணம் என்றால், இதற்கு முன்பும் பலமுறை அணை முழுமையாக நிரம்பியிருக்கிறது. அப்போதெல்லாம் நில நடுக்கம் ஏற்படவில்லை.
ஆனாலும் பல ஆண்டுகளுக்கு முன்பு, மஹாராஷ்டிராவில் லத்தூர் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர். அதற்குக் காரணம், அங்கு ஓடக்கூடிய ஆற்றை பல இடங்களில் தடுத்து அணைகள் கட்டியிருந்தனர். அந்த அணைகள் அனைத்தும் தரமற்ற புவி பரப்பில் கட்டப்பட்டு இருந்தது. புவியமைப்பியல் நிபுணர் ஒருவரிடம் கேட்டதற்கு, மேட்டூர் அணைக்கும் நில அதிர்வுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறினார். ஆனாலும் மக்களிடம் இதுபற்றி ஒருவித பயம் இருக்கிறது. அதை போக்குவதும் கொஞ்சம் கடினம்தான்,'' என்றார் ஜெயமுருகன்.
அவசர அழைப்புக்கு '1077':
இதற்கிடையே, சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''நிலநடுக்கம் உணரப்படும் நேரங்களில் பொதுமக்கள் பயமின்றி இருக்கும்படியும், ஜன்னல், கண்ணாடி கதவுகள், அலமாரிகள், பாலங்கள், உயர்மின் அழுத்தக் கம்பிகள், விளம்பர பலகைகள் அருகில் இருக்க வேண்டாம் என்றும, லிஃப்டுகளை பயன்படுத்த வேண்டாம்.
நெருக்கமான கட்டடங்களை தவிர்த்து வெட்டவெளியில் பாதுகாப்பாக இருக்கும்படியும், இயற்கை இடர்பாடுகள் தொடர்பான தகவல்களுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் உள்ள 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியை தொடர்ப கொள்ளலாம்,'' என்று தெரிவித்துள்ளார்.